ஆன்லைன் ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, வருகின்ற ஜனவரி மாதம் முதல் அறிமுகமாகவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த கூடுதல் கட்டணமும் இன்றி, இருக்கையின் இருப்பு அடிப்படையில் வேறு தேதிக்கு மாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படும் பட்சத்தில், பயணத் திட்டம் வேறு தேதிக்கு மாறினால், டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு வேறு டிக்கெட்டைதான் முன்பதிவு செய்ய முடியும்.
ரத்து செய்யப்படும் டிக்கெட்டுக்கு குறிப்பிட்ட தொகையும் பயணிகளிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும். மேலும், இணைய சேவைக் கட்டணங்கள் எல்லாம் கூடுதல் செலவு.
இந்த நிலையில், உறுதிசெய்யப்பட்ட ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள், வேறு தேதிக்கு கூடுதல் கட்டணம் இன்றி மாற்றிக் கொள்ளலாம் என்று அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
”இணையவழியில் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கை வசதி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் மட்டும் பயண தேதியை மாற்றிக் கொள்ள முடியும். மாற்றும் தேதியில் இருக்கைகள் உறுதியாவது, அந்த தேதியில் காலியாக உள்ள இடங்களைப் பொருத்து அமையும். இந்த வசதிக்காக பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
அதே நேரத்தில் மாற்றும் தேதியில் புதிய பயணக் கட்டணம் அதிகம் இருந்தால் மீதமுள்ள தொகையைச் செலுத்த வேண்டும்.
இப்போது பயண தேதியை மாற்ற வேண்டுமென்றால் ஏற்கெனவே முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு புதிய டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. டிக்கெட்டை ரத்து செய்வதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் எதிா்பாராதவிதமாக பயணத் தேதியை மாற்றும் சூழல் ஏற்பட்டால் டிக்கெட் ரத்து கட்டணமும், நேரமும் மிச்சமாகும். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவாா்கள்” என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.