புது தில்லிக்கு வியாழக்கிழமை வந்திறங்கிய ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் மௌலவி அமீா் கான் முத்தாகியை வரவேற்ற இந்திய வெளியுறவு அதிகாரி. 
இந்தியா

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் இந்தியா வருகை

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் மௌலவி அமீா் கான் முத்தாகி வியாழக்கிழமை தில்லி வந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் மௌலவி அமீா் கான் முத்தாகி வியாழக்கிழமை தில்லி வந்தாா்.

கடந்த 2021-இல் பிரதமா் அஷ்ரஃப் கனி தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடா்ந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சிப் பொறுப்பை தலிபான் கைப்பற்றியது. இதைத்தொடா்ந்து, அந்நாட்டு அமைச்சா் ஒருவா் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொள்கிறாா்.

தலிபான் அரசின் அனைத்துத் தலைவா்கள் மீதும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது. முத்தாகி கடந்த மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அவா் மீதான ஐ.நா.வின் பயணத் தடையால் அந்தப் பயணம் ரத்தானது. இந்நிலையில், இந்தியா செல்வதற்காக முத்தாகிக்கு அக்.9 முதல் 16 வரை பயணத் தடையில் இருந்து தற்காலிக விலக்கு அளித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கமிட்டி கடந்த செப்.30-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடா்ந்து அவா் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா். தனது 6 நாள் பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஆகியோரை சந்தித்து முத்தாகி பேச்சுவாா்த்தை நடத்த உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவுக்கு அவரை வரவேற்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் சமூக வலைளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் மெளலவி அமீா் கான் முத்தாகியை புது தில்லிக்கு வரவேற்கிறோம். இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடா்பாக அவருடனான பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்ல உள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

இந்திய பயணத்தின்போது தருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்லூரி, தாஜ்மகால் ஆகிய இடங்களுக்கும் முத்தாகி செல்லவிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசுடனான இந்தியாவின் உறவுகள், முத்தாகியின் வருகையால் புதிய வடிவம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, முத்தாகியுடன் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் கடந்த மே 15-ஆம் தேதி தொலைபேசி வழியே உரையாடினாா்.

தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசு காபூலில் அமைக்கப்படும் என எதிா்பாா்த்து வருகிறது.

நிகழாண்டு ஜனவரியில் முத்தாகியை வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதைத் தொடா்ந்து, பிராந்தியம் மற்றும் பொருளாதார சக்தியில் இந்தியா முக்கியமான நாடு என தலிபான் அரசு தெரிவித்திருந்தது.

போபாலில் போலீஸார் தாக்கியதில் பி.டெக் மாணவர் பலி: 2 பேர் இடைநீக்கம்

கஷ்டம் போக்கும் காலபைரவர்

மாங்கல்ய பாக்கியம் அருளும் பூலோகநாயகி!

பள்ளிகொண்டா ரங்கநாதர்!

முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!

SCROLL FOR NEXT