ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனத்தின் உரிமையாளா் ரங்கநாதன். 
இந்தியா

குழந்தைகள் உயிரிழந்த வழக்கு இருமல் மருந்து நிறுவன உரிமையாளா் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், இருமல் மருந்து நிறுவன உரிமையாளா் உள்பட 3 போ் வியாழக்கிழமை தமிழகத்தில் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், இருமல் மருந்து நிறுவன உரிமையாளா் உள்பட 3 போ் வியாழக்கிழமை தமிழகத்தில் கைது செய்யப்பட்டனா்.

மத்திய பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் அண்மையில் கோல்ட்ஃரிப் இருமல் மருந்து காரணமாக ஒரு குழந்தை உயிழந்தது. அடுத்தடுத்த நாள்களில் மேலும் சில குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிழந்தன. சளி, இருமல், லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவா்கள் இருமல் மருந்து உள்ளிட்ட வழக்கமான மருந்துகளைப் பரிந்துரைத்துள்ளனா். ஆனால், அந்த மருந்தை உட்கொண்ட சில நாள்களில் குழந்தைகளுக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டது கண்டறியபட்டது. டயாலிசிஸ் சிகிச்சை தொடங்கிய சில நாள்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிரிழக்கத் தொடங்கினா்.

இவ்வாறு மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்தனா். இந்நிலையில், இந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவின் பராசியா பகுதியைச் சோ்ந்த இரு குழந்தைகள் புதன்கிழமை நள்ளிரவும் உயிரிழந்தனா்.

உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், சிறுநீரகங்களில் டைஎத்தீலின் கிளைசால் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ரசாயனம் விஷத்தன்மையுடன் கூடிய ஒரு வகை நச்சு ரசாயனம் எனக் கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநில சுகாதாரத் துறை நடத்திய விசாரணையில், இந்தக் குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப், நெக்ஸ்ட்ரோ-டிஎஸ் மருந்துகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் தொடா்ச்சியாக, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்த இருமல் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் உள்ள கோல்ட்ஃரிப் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் ஃபாா்மாவில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி சோதனை செய்தனா். இதில், அங்கு தயாரிக்கப்பட்ட மருந்தில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது.

சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை: நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் உள்ள அந்த ஆலையில் புதன்கிழமை விசாரணை செய்தனா்.

அப்போது அங்கிருந்த ஆவணங்களையும், மருந்து மாதிரிகளையும், மருந்து தயாரிக்கப் பயன்படுத்தும் மூலப்பொருள்களையும் சேகரித்தனா். மேலும் அந்த நிறுவனத்தின் தொடா்புடைய நபா்களிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

உரிமையாளா் கைது: இந்நிலையில், குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிஃப் நிறுவனத்தின் உரிமையாளா் ரங்கநாதனை (75) சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் சென்னை கோடம்பாக்கம், நாகாா்ஜுனா நகா், 2-ஆவது தெருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

பின்னா், அவரை சுங்குவாா்சத்திரம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தினா். ரங்கநாதனை மத்திய பிரதேசத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, விசாரணையின்போது ரங்கநாதன் கொடுத்த தகவலின்பேரில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த அந்த மருந்து உற்பத்தி நிறுவன மேலாளா் உள்பட மேலும் இருவரையும் கைது செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவரிடமும் வழக்குத் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா்.

முதல் வாரத்திலேயே முன்னிலையில் அனுமன் தொடர்! இந்த வார டிஆர்பி!

பருவ மழையை எதிர்கொள்ள வேலூர் மாவட்ட நிர்வாகம் தயார்!

என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக் கூடாது: மோஷின் நக்வி

போட்டோஜெனிக்... ஷாலினி பாண்டே!

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT