கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்தாண்டு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனிடையே வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக ரூ.2,220 கோடி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரள அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் நிவாரணமாக வெறும் ரூ. 260 கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்பின்னர் கேரளத்துக்கு இதுவரை நிதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைநகருக்குச் சென்று அங்குப் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். மோடியுடனான சந்திப்பின்போது, வயநாடு நிலச்சரிவு தொடர்பான மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ. 2,221.03 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதி விடுவிக்குமாறு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், கோழிக்கோடு கினலூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும், கடன் பெறுவதில் கேரள அரசுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக நேற்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி ஆகியோரையும் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.