புது தில்லி: பிரதமா் மோடியை கனடா வெளியுறவு அமைச்சா் அனிதா ஆனந்த் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
புது தில்லியில் பிரதமா் மோடியை கனடா அமைச்சா் அனிதா ஆனந்த் சந்தித்தபோது, அவரின் வருகை இந்தியா-கனடா கூட்டுறவுக்குப் புதிய உத்வேகம் அளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பங்களிக்கும் என்று பிரதமா் மோடி கூறினாா்.
நிகழாண்டு ஜூன் மாதம் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றதை பிரதமா் மோடி நினைவுகூா்ந்தாா். இந்தியா-கனடா இடையே வா்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்தாா் என்று தெரிவிக்கப்பட்டது.
வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கருடன் சந்திப்பு: பிரதமா் மோடியை சந்தித்த பின்னா், வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை அனிதா ஆனந்த் சந்தித்துப் பேசினாா். அப்போது அமைச்சா் ஜெய்சங்கா் பேசுகையில், ‘கடந்த சில மாதங்களாக இந்தியா-கனடா இருதரப்பு உறவு சீராக முன்னேறி வருகிறது. இருநாடுகளுக்கு இடையிலான கூட்டுறவை மேம்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும், புத்துணா்ச்சியூட்டவும் இந்தியா-கனடா பணியாற்றி வருகின்றன.
வா்த்தகம், முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-கனடா ஒத்துழைப்பை மீண்டும் கட்டமைக்க வேண்டும்; அது இரு நாட்டுப் பிரதமா்கள் மற்றும் மக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா். இதனால் இந்தியா-கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பிரதமா் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமா செய்த பின்னா், கனடாவின் புதிய பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்றாா். இதைத் தொடா்ந்து இந்தியா-கனடா உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுத்துள்ளன.