இந்தியாவில் தரமற்ற 3 இருமல் மருந்துகள் அடையாளம் காணப்பட்டிருப்பது குறித்து உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட "கோல்ட்ரிஃப்', "ரெஸ்பிஃபிரஷ் டிஆர்', "ரீலைஃப்' ஆகிய மூன்று இருமல் மருந்துகள் விநியோகம் தொடர்பாக கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறும், அவை விநியோகிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை முழுமையாக திரும்பப் பெறுவதோடு, அதுகுறித்த தகவலை டபிள்யுஹெச்ஓ-க்கு அறிவிக்கை செய்யுமாறும் உலக நாடுகளை டபிள்யுஹெச்ஓ கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய இருமல் மருந்துகள் வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து இந்தியாவிடம் டபிள்யுஹெச்ஓ கேள்வி எழுப்பியது. அதற்கு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதே நேரம், இந்த இருமல் மருந்துகள் சட்ட விரோதமாக விநியோகச் சங்கிலி முறைகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பதற்கான ஆதாரம் எதுவும் தற்போது இல்லை.
இந்த நிலையில், இந்த 3 இருமல் மருந்துகள் குறித்து உலக நாடுகளுக்கு டபிள்யுஹெச்ஓ எச்சரிக்கையை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட "கோல்ட்ரிஃப்', "ரெஸ்பிஃபிரஷ் டிஆர்', "ரீலைஃப்' ஆகிய இருமல் மருந்துகள் உரிய தரம் மற்றும் விவரக் குறிப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை. இந்த தரமற்ற கலப்பட இருமல் மருந்துகளைப் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.
எனவே, இந்த இருமல் மருந்துகள் சந்தைகளில் முறையற்ற விநியோகச் சங்கிலி முறைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அவ்வாறு, விநியோகிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அதுகுறித்து டபிள்யுஹெச்ஓ-க்கு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதோடு, பயன்பாட்டிலிருந்தும் அவற்றை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று டபிள்யுஹெச்ஓ அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.