மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரிகளுக்கு இந்தியா மானியம் வழங்குவது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யுடிஓ) சீனா புகார் அளித்துள்ளது.
உள்நாட்டு மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க, உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச் சலுகை, மானியம் என திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக சீன நிறுவனங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் புகாரை அளித்துள்ளது.
இது குறித்து சீன வர்த்தக அமைச்சகம், "உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவித்துள்ள இறக்குமதி குறைப்பு மானிய திட்டம், பலதரப்பு வர்த்தக விதிகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டு நிறுவனங்களுக்கு பலனளிக்கக் கூடியதாகவும், சீன நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. அதனடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.
சீனா புகார் அளித்துள்ளதை உறுதிப்படுத்திய மத்திய வர்த்தக அமைச்சக மூத்த அதிகாரி, "இதேபோன்ற புகாரை துருக்கி, கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எதிராகவும் டபிள்யுடிஓ-வில் சீனா சமர்ப்பித்துள்ளது. இந்தப் புகார் தொடர்பாக ஆலோசிக்க இந்தியாவுக்கு டபிள்யுடிஓ அழைப்பு விடுத்துள்ளது' என்றார்.
இதுகுறித்து மத்திய வர்த்தகச் செயலர் ராஜேஷ் அகர்வால் கூறுகையில், "சீனா சமர்ப்பித்துள்ள புகார் குறித்து மத்திய அமைச்சகம் முழுமையாக ஆராயும்' என்றார்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உள்ளது.
சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 2023-24-ஆம் ஆண்டில் ரூ. 1.46 லட்சம் கோடி (16.66 பில்லியன் டாலர்) என்ற அளவில் இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் ரூ. 1.25 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது 14.5 சதவீதம் சரிந்தது. அதே நேரம், சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி மதிப்பு 11.52 சதவீதம் உயர்ந்தது.
2023-24-ஆம் ஆண்டில் ரூ. 8.95 லட்சம் கோடியாக இருந்த இறக்குமதி, 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ. 9.99 லட்சம் கோடியாக (11.52%) உயர்ந்தது. இதனால், 2024-25-ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ரூ. 8.73 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.