வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மகாராஷ்டிரத்தில் நடைபெற இருந்த ஒரு மோசடியை சைபர் குற்றப்பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள மீரா-பயந்தர் பகுதியைச் சேர்ந்த சில முகவர்கள், இஸ்மாயில் இப்ராஹிம் சையத் என்ற நபரை தாய்லாந்து வழியாக லாவோஸுக்கு சட்டவிரோதமாக செல்ல உதவி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
லாவோஸில் ஒரு ஆன்லைன் கால் சென்டரில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கித் தருவதாக சையத்துக்கு அவர்கள் உறுதியளித்து பணம் பெற்றுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த சைபர் குற்றப்பிரிவு போலீசார், சையதைத் தொடர்பு கொண்டு, அவரை அழைத்துக்கொண்டு அந்த முகவர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையின்போது, சையத் மட்டுமின்றி தானேவைச் சேர்ந்த ஷபான் அலி, குஜராத்தைச் சேர்ந்த லக்கி அலி ஆகிய மூவரையும் சட்டவிரோதமாக மும்பையிலிருந்து தாய்லாந்து வழியாக லாவோஸுக்கு அனுப்ப அந்த முகவர்கள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்தது.
முன்னதாக லாவோஸுக்கு இதுபோன்று அனுப்பப்பட்டவர்கள், சீன வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் பின்னர் ஒரு சைபர் மோசடி நிறுவனத்தில் சேர்க்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்தியப் பெண்களின் பெயர்களில் போலியான பேஸ்புக் கணக்குகளை உருவாக்கவும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுடன் ஆன்லைன் மூலமாக நட்புறவை ஏற்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெறவும் பின்னர் மோசடித் திட்டங்களில் அவர்கள் பணத்தை முதலீடு செய்ய வைக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
மோசடி நிறுவனத்தில் பணிபுரிவோர், மோசடியில் பங்கேற்க மறுத்தால் சிறை, சித்திரவதை, பாஸ்போர்ட் தரமறுப்பது என கடுமையான விளைவுகளைச் சந்திக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
தற்போது மும்பையில் இருந்து மூவரை லாவோஸ் அனுப்ப முயன்ற விவகாரத்தில், ஆமிர் சோஹைல் நயீம் அகமது என்ற முகவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் சமீர் ஷேக், ஆமிர் கான், சாகர் கௌதம் மோஹிதே என்ற அலெக்ஸ் என்ற கிறிஸ் என மூவரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
தென்கிழக்கு ஆசியாவில் இதுபோன்ற மோசடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இணையவழி குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.