ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் (யுஎன்ஹெச்ஆர்சி) உறுப்பினராக இந்தியா ஏழாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான தேர்தல் முடிவுகளை யுஎன்ஹெச்ஆர்சி தனது சமூக ஊடக பக்கத்தில் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி, 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் அதன் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பாகச் செயல்பட்டுவரும் யுஎன்ஹெச்ஆர்சி, 47 நாடுகளை உறுப்பினர்களைக் கொண்டது. இதன் உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சமமான புவியியல் பகிர்ந்தளிப்பு விதிகளின்படி 5 பிராந்திய குழுக்களுக்கு இந்த 47 இடங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆப்பிரிக்க நாடுகளுக்கு 13 இடங்கள், ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு 13 இடங்கள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 6 இடங்கள், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 8 இடங்கள், மேற்கு ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு ஏழு இடங்கள் எனப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
யுஎன்ஹெச்ஆர்சி தொடங்கப்பட்ட 2006-ஆம் ஆண்டுமுதல் அதன் உறுப்பினராக இந்தியா இருந்து வருகிறது. தொடர்ந்து மூன்று முறை உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற விதியின்படி 2011, 2018 மற்றும் 2025 ஆகிய மூன்று ஆண்டுகள் மட்டும் இந்தியா அதன் உறுப்பினராக இடம்பெறவில்லை. மாறாக, 2006-07, 2008-10, 2012-14, 2015-17, 2019-21, 2022-24 என ஆறு முறை யுஎன்ஹெச்ஆர்சி உறுப்பினராக இந்தியா இருந்தது. யுஎன்ஹெச்ஆர்சி தொடங்கப்பட்ட 2006-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தியா அதிகபட்சமாக 190 உறுப்பினர்களில் 173 வாக்குகளைப் பெற்று தேர்வானது.
தற்போது, ஏழாவது முறையாக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது. இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரீஷ் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "2026-28 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு யுஎன்ஹெச்ஆர்சி உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது. இது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகள் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கங்களுக்காக சேவையாற்றுவதை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவுக்கு ஆதரவளித்த அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் நன்றி' என்றார்.
அங்கோலா, சிலி, ஈக்வடார், எகிப்து, எஸ்டோனியா, இராக், இத்தாலி, மோரீஷஸ், பாகிஸ்தான், ஸ்லோவேனியா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், வியத்நாம் ஆகிய நாடுகளும் 2026 ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 3 ஆண்டுகளுக்கு யுஎன்ஹெச்ஆர்சி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.