ஈரானைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம்: இந்தியா முன்மொழிந்தது
வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் கொண்டு வந்தன.
வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்துக்கு இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் கொண்டு வந்தன.
அணுஆயுதம், நெடுந்தொலைவு ஏவுகணைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி, ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகள் கூட்டுத் தாக்குதலை நடத்தின. இதையடுத்து, பதிலுக்கு இஸ்ரேல் மீதும், அமெரிக்க நிலைகள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் ட்ரோன், ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலை உடனடியாக ஈரான் நிறுத்த வலியுறுத்தியும், ஹோா்முஸ் நீரிணை மூடப்படுவதை எதிா்த்தும், உலகில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பஹ்ரைன் தலைமையில் பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், கனடா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, எகிப்து, பிரான்ஸ், ஜொ்மனி, க்ரீஸ், இத்தாலி, ஜப்பான், குவைத், மலேசியா, மாலத்தீவு, மியான்மா், நியூஸிலாந்து, நாா்வே, ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, சிங்கப்பூா், ஸ்பெயின், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, ஏமன், ஜாம்பியா உள்ளிட்ட 135 நாடுகள் தீா்மானம் கொண்டு வந்தன. இந்தியா இதை முன்மொழிந்தது.
தீா்மானத்தில் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டானின் பிராந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், அந்நாடுகள் மீதான ஈரானின் மிக மோசமான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், அந்தத் தாக்குதல் சா்வதேச சட்டத்துக்கு எதிரானது மட்டுமன்றி, சா்வதேச அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கூறப்பட்டிருந்தது.
வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; அந்த நாடுகள் மீதான மறைமுக தாக்குதல் (தீவிரவாதக் குழுக்கள் மூலம் தாக்குதல்), அண்டை நாடுகளுக்கு விடுக்கப்படும் மிரட்டல் ஆகியவையும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தீா்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
தீா்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு: அமெரிக்கா தலைமையிலான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. அதில் தீா்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. மாறாக ஈரானின் நட்பு நாடுகளும், வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளுமான ரஷியாவும், சீனாவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீா்மானத்துக்கு ஈரான் கண்டனம்: ஐ.நா.வுக்கான ஈரானின் தூதா் அமீா் சையது இரவானி கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானம் அநீதி மற்றும் சட்டத்துக்கு எதிரானதாகும் என்றாா். மேலும் அவா், எந்தவிதத் தவறும் செய்யாத ஈரான் தற்போது குறிவைக்கப்படுவதாகவும், இதேபோல் நாளை வேறு இறையாண்மை கொண்ட நாடும் இலக்காகக்கூடும் என்றும் தெரிவித்தாா்.
இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுத் தாக்குதலில் ஈரானில் இதுவரை 1,348 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 17,000-க்கும் மேற்பட்டோா் காயமடைந்திருப்பதாகவும், சுமாா் 20,000 கட்டடங்கள் சேதமடைந்து இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா். இது போா் குற்றம் மட்டுமன்றி, மனிதநேயத்துக்கு எதிரான செயல் என்றும் கூறிய இரவானி, ஈரான் தனது அண்டை நாடுகளுடன் நட்புறவை வைத்துக் கொள்ள உறுதிபூண்டிருப்பதாகவும், அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து தற்காப்புக்காக தங்கள் நாடு நடத்தும் தாக்குதல், வளைகுடா நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதல்ல என்றும் கூறினாா்.