மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பொறியியல் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட மாணவி, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் எந்த மாநிலத்தவர் என்ற விவரத்தை காவல் துறையினர் வெளியிடவில்லை. மேற்கு வங்கத்தின் துர்காபூரில் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவரும் ஒடிஸா மாணவி ஒருவர் அண்மையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொல்கத்தாவின் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவி, ஆனந்தபூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார்.
அதில், "ஆனந்தபூர் பகுதியில் நான் தங்கியுள்ள வாடகை வீட்டுக்கு வந்த சக மாணவர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். நான் சுயநினைவை இழந்ததும், என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டு தப்பிவிட்டார்' என்று மாணவி கூறியிருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருந்த மாணவரை கைது செய்தனர். பின்னர், நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை அக்டோபர் 22-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. விரிவான விசாரணைக்குப் பிறகு பிற விவரங்கள் வெளியிடப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.