குஜராத்தில் சுற்றுலாத் தல டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் இணையதளத்தைப் போலவே ஒன்றை போலியாக உருவாக்கி, அதன் மூலம் மோசடி செய்து வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் ஒரு சில சுற்றுலாத் தலங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விற்கப்படும் நுழைவுச் சீட்டுகளைத் தடுத்து வைத்து, அதனை சிலர் கள்ளச்சந்தையில் விற்பதாக சிஐடி-க்கு புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து, சிஐடி நடத்திய விசாரணையில், கிர் தேசிய பூங்கா மற்றும் தேவலியா பூங்கா போன்றவற்றுக்கான நுழைவுச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும்போது, சிலர் மென்பொருள் சாதனத்தைப் பயன்படுத்தி அதிகளவிலான நுழைவுச் சீட்டுகளை வாங்கி வைத்துக்கொள்வது தெரிய வந்தது. போலியான ஆதாரங்கள் மூலம் பல்வேறு பெயர்களில் நுழைவுச் சீட்டுகளை அவர்கள் மோசடி செய்துள்ளனர்.
மேலும், அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போலவே போலியான ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதில் அவர்கள் தடுத்து நிறுத்திய நுழைவுச் சீட்டுகளை அதிக விலையில் விற்பனை செய்து வந்துள்ளனர். அதிகாரப்பூர்வ தளத்தைப் போலவே இருந்ததால், பலரும் இந்த மோசடி வலையில் சிக்கியுள்ளனர்.
இதுதொடர்பாக, 3 பேரை கைது செய்த காவல்துறையினர், 2024-ல் மட்டும் 83,000 நுழைவுச் சீட்டுகளை அவர்கள் நிறுத்தி வைத்ததாகக் தெரிவித்தனர்.
அதிகாரப்பூர்வ தளத்தில் நுழைவுச் சீட்டுக்கான பற்றாக்குறையை செயற்கையாக உருவாக்கி, பின்னர் இவர்களின் இணையதளத்துக்குள் சென்று நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளும்வகையில் போலி இணையதளத்தை வடிவமைத்துள்ளனர்.
குறிப்பாக, திருவிழாக் காலங்களில் மற்றும் விடுமுறை நாள்களில் அதிகளவிலான விலையில் நுழைவுச் சீட்டுகளை விற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அதிகாரப்பூர்வ தளத்தில் நுழைவுச் சீட்டுகளைப் பெற இயலாதவர்கள் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்படுவர். ஆனால், அந்த காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களை நீக்கிவிட்டு, தங்களிடம் நுழைவுச் சீட்டு பதிவு செய்தவர்களின் பெயர்களை மோசடி கும்பல் சேர்த்து விடுவர். இவ்வாறாகத்தான் நீண்டகாலமாக மோசடி ஈடுபட்டது தெரிய வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.