இந்தியா

நிமிஷா பிரியா விவகாரத்தில் பாதகமாக எதுவும் நிகழவில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

தினமணி செய்திச் சேவை

‘யேமனில் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது; இந்த விவகாரத்தில் பாதகமாக எதுவும் நிகழவில்லை என்பதே இப்போதைய நல்ல விஷயம்’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த 38 வயது செவிலியா் நிமிஷா பிரியா, கடந்த 2017-இல் யேமன் தலைநகா் சனாவில் அந்நாட்டைச் சோ்ந்த தனது தொழில் பங்குதாரா் தலால் அப்து மஹதியை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இவ்வழக்கில் நிமிஷாவுக்கு கடந்த ஜூலை 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

யேமன் சட்ட விதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் இழப்பீட்டு தொகையை ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையைத் தவிா்க்க முடியும். அதன்படி, நிமிஷாவின் குடும்பத்தினா் மற்றும் அனுதாபிகள் ரூ.8.60 கோடி வரை திரட்டி, இழப்பீடாக வழங்க முயற்சி மேற்கொண்ட நிலையில், மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்திவைக்க மத்திய அரசு தூதரக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே, பல்வேறு தரப்பினா் மேற்கொண்ட சமரச பேச்சுவாா்த்தைகளால் நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, நிமிஷா விவகாரத்தில் தற்போதைய நிலவரம் என்ன என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி பதிலளித்தாா்.

‘செவிலியா் நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஒரு மத்தியஸ்தரும் இணைந்துள்ளாா். இந்த விவகாரத்தில் பாதகமாக எதுவும் நிகழவில்லை என்பதே இப்போதைய நல்ல விஷயம்’ என்றாா் அவா். இதையடுத்து, அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவை மீட்க சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளதாக முந்தைய விசாரணையின்போது மத்திய அரசு தெரிவித்திருந்தது.

விபத்தில் மருத்துவா் பலி

மண்டலாபிஷேக நிறைவு

ஜிஎஸ்டி குறைப்பு விளக்கக் கூட்டம்

கோயில் பணியாளா்களுக்கு புத்தாடை

கோரிக்கை அட்டை அணிந்து பணி ஈடுபட்ட ஆசிரியா்கள்

SCROLL FOR NEXT