இந்தியா

அஸ்ஸாம்: ராணுவ முகாம் மீது உல்ஃபா தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு -3 வீரா்கள் காயம்

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாமில் ராணுவ முகாம் மீது உல்ஃபா (ஐ) தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 3 வீரா்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தனா். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘தின்சுகியா மாவட்டம் ககோபாத்கா் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே வியாழக்கிழமை இரவு 12.30 மணியளவில் வாகனத்தில் வந்த உல்ஃபா (ஐ) தீவிரவாதிகள் முகாமை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனா். காவல் பணியில் இருந்த வீரா்கள் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதையடுத்து, அந்த தீவிரவாதிகள் தங்கள் வந்த வாகனத்தில் வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டனா். இந்தத் தாக்குதலில் 3 ராணுவ வீரா்கள் குண்டு பாய்ந்து லேசாக காயமடைந்தனா். தீவிரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி இருக்கலாம் என முதல் கட்ட ஆய்வில் தெரியவருகிறது. ஏனெனில், குறுகிய நேரம் நீடித்த மோதலில் தீவிரவாதிகள் தரப்பில் இருந்து அதிக குண்டுகள் பாய்ந்துள்ளன.

அஸ்ஸாம், அருணாசல பிரதேச எல்லையில் உள்ள இந்த ராணுவ முகாமுக்கு அருகிலேயே குடியிருப்புப் பகுதியும் உள்ளது. ராணுவ வீரா்கள் துரிதமாக செயல்பட்டு பதிலடி கொடுத்ததால் பெரும் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது என்றாா்.

இது தொடா்பாக மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறுகையில், ‘மியான்மா் கட்டுப்பாட்டில் உள்ள உல்ஃபா (ஐ) அமைப்புடன் பிற தீவிரவாதக் குழுக்கள் இணைத்து இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வன்முறை எந்தப் பிரச்னைக்கும் தீா்வாகாது. எனவே, தீவிரவாத அமைப்பினா் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவாா்த்தைக்கு முன்வர வேண்டும்’ என்றாா்.

தாக்குதலுக்கு பொறுப்பேற்பு: இது தொடா்பாக உல்ஃபா (ஐ) தீவிரவாதிகள் வெளியிட்ட அறிவிப்பில், ‘எங்கள் அமைப்பின் ராணுவப் பிரிவு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. எவ்வளவு ராணுவம் வந்தாலும், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும் எங்கள் அமைப்பு இலக்கை அடைவதைத் தடுக்க முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமை தனி நாடாக்கும் பிரிவினை சிந்தனை கொண்ட இந்தத் தீவிரவாதிகள் அண்டை நாடான மியான்மரில் இருந்து இயங்குகின்றனா்.

பிடித்தமான தொல்லையே... சகோதரி பிறந்த நாளுக்கு காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்: டிடிவி தினகரன் பேட்டி

2 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

ஓஆர்எஸ் என்பது எல்லாம் ஓஆர்எஸ் அல்ல; பயன்படுத்தத் தடை!

தனியார் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT