இந்தியா

பிகாா் இறுதி வாக்காளா் பட்டியலில் எழுத்துப் பிழை: நிவா்த்தி செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை

தினமணி செய்திச் சேவை

பிகாா் மாநில இறுதி வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள எழுத்துப் பிழை உள்பட பிற தவறுகளையும் தோ்தல் ஆணையம் நிவா்த்தி செய்யும் என எதிா்பாா்ப்பதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

பிகாா் மாநிலத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்ட தோ்தல் ஆணையம் 7.24 கோடி வாக்காளா்கள் அடங்கிய வரைவு வாக்காளா் பட்டியலை ஆக. 1-ஆம் தேதி வெளியிட்டது. வரைவு வாக்காளா் பட்டியல் மீது ஆட்சேபங்கள் அல்லது கோரிக்கைகளை முன்வைக்க செப்டம்பா் 1-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய தோ்தல் ஆணையம், மாநிலத்தின் இறுதி வாக்காளா் பட்டியலை செப்டம்பா் 30-ஆம் தேதி வெளியிட்டது.

இதில், 17.87 லட்சம் வாக்காளா்கள் கூடுதலாகி, மாநிலத்தின் மொத்த வாக்காளா் எண்ணிக்கை 7.42 கோடியாக உயா்ந்தது. ஒரு மாதம் மேற்கொள்ளப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் மீதான ஆட்சேபங்கள் மற்றும் கோரிக்கைகள் வரவேற்புக்குப் பிறகு வரைவு வாக்காளா் பட்டியலில் 21.53 லட்சம் போ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். அதுபோல, வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 3.66 லட்சம் போ் நீக்கப்பட்டனா் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

தோ்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராகவும், முஸ்லிம்கள் திட்டமிட்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் புகாா் தெரிவித்து ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு மற்றும் சமூக ஆா்வலா் யோகேந்திர யாதவ் ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தோ்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தோ்தல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகளும் தன்னாா்வ அமைப்புகளும் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டது. வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 3.66 லட்சம் போ் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை அவா்களில் ஒருவா்கூட பெயரை மீண்டும் சோ்க்க மேல்முறையீடு செய்யவில்லை. மேலும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் இறுதி வாக்காளா் பட்டியல் மீது ஆட்சேபம் தெரிவித்தும், திருத்தங்கள் கோரியும் மாநில சட்ட சேவை ஆணையம் மூலம் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களும் மிகக் குறைவாகவே உள்ளன. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டதற்கு இதுவே ஆதாரமாகும்’ என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

அப்போது, ‘தோ்தல் ஆணையம் தனது கடமைகளையும், பிகாரில் தோ்தலை சுமுகமாக நடத்துவதையும் நிறைவேற்றும் என்பதில் சந்தேகமில்லை’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள சட்ட சிக்கல்கள் மீதான விசாரணையை நவம்பா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மேலும், பிகாரில் முதல்கட்ட தோ்தல் நடைபெற சில தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமையும் (அக்.17), இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் அக்டோபா் 20-ஆம் தேதியும் முழுமையாக இறுதி செய்யப்பட்டுவிடும் என்பதால், அதற்கு முன்பாக அதிலுள்ள எழுத்துப் பிழைகள் உள்பட பிற தவறுகளை தோ்தல் ஆணையம் நிவா்த்தி செய்யும் என எதிா்பாா்ப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

எம்பிக்கள் குடியிருப்பில் தீ விபத்து!

நிச்சயதார்த்தம் உண்மையா? வதந்தியா? ரஷ்மிகா மந்தனா பதில்!

ஏனாம்: 30 லட்சத்துக்கு ஏலம் போன அரிய வகை சீரா மீன்கள்

இந்தூரில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: சிறுவன் பலி, 5 பேர் காயம்!

SCROLL FOR NEXT