தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றால், நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக்கப்படுவரா? என்ற கேள்விக்கு தேர்தலுக்குப் பிறகுதான் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பிகாரின் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
பிகார் பேரவைத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 20 நாள்களே இருப்பதால், தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் இந்தியா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி தனியாகவும் களம் காணவிருப்பதால் பிகார் தேர்தலின் தற்போதைய நிலவரம் மும்முனைப் போட்டியாக இருக்கிறது.
பிகார் தேர்தலில் காங்கிரஸின் இந்தியா கூட்டணித் தரப்பில் இழுபறியும், மந்த நிலையே தொடருகிறது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் தலைமைத் தாங்கினாலும், கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கவோ அல்லது நிதீஷை ஓரங்கட்டிவிட்டு புதிய ஆட்சியை ஏற்படுத்தவும் பாஜகவினர் சுழன்றுக் கொண்டிருக்கின்றனர். இரண்டு கட்சியினரும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், இதனை உறுதிபடுத்தும் விதமாக மத்திய அமைச்சர் அமித் ஷாவும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை ஓரங்கட்டும் விதமாக நேர்காணலில் சூசகமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அமித் ஷா பேசுகையில், “நிதீஷ் குமார் முதல்வராக இருப்பாரா இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. இப்போதைக்கு, நாங்கள் நிதீஷ் குமார் தலைமையில் போட்டியிடுகிறோம். தேர்தலுக்குப் பிறகு, அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து தங்கள் முதல்வரை முடிவு செய்யும்.
2020 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியைச் சந்தித்த நிதீஷ் குமார், அவரது கட்சியைவிட பாஜகவினர் அதிக இடங்களில் வென்றதால், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும் என்ற கருதினார். ஆனால், நாங்கள் எப்போதும் எங்கள் கூட்டணியை மதித்தோம். மேலும், நிதீஷ்குமார் மரியாதையின் அடிப்படையில்தான் முதல்வராக நியமிக்கப்பட்டார்” என்றார்.
ஏற்கனவே, மகாராஷ்டிரம் உள்ளிட்ட இடங்களில் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பின்னர் அந்தக் கட்சிகளை காலி செய்யும் வேலையில் பாஜக ஈடுபடுவதாகவும், அதன்பின்னர் ஆட்சியைக் கைப்பற்றுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், ஒருவேளை பாஜக அதிக தொகுதிகளை வென்றால் நிதீஷ் குமாரின் பதவியும் பறிபோகும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.