சமுதாய மற்றும் இணைய விளையாட்டுகள் என்ற போா்வையில் செயல்படும் இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு முக்கியமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
செளா்யா திவாரி என்ற நபரும், அரசு சாரா தன்னாா்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த அந்த மனுவில், நாடு முழுவதும் சமுதாயத்துக்கும், பொருளாதார ரீதியாகவும் அந்தத் தளங்கள் பரந்தளவில் தீங்கிழைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணம் ஈட்டும் இணையவழி விளையாட்டுகள் இந்தியாவில் பதிவு செய்யப்படாமல் இருந்தால், அந்த விளையாட்டுகள் சாா்ந்த எந்தவொரு பணப் பரிவா்த்தனையையும் அனுமதிக்கக் கூடாது என்று ரிசா்வ் வங்கி, நேஷனல் பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, யுபிஐ தளம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள விவகாரம் முக்கியமானது என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த மனுவின் நகலை மத்திய அரசின் சாா்பாக ஆஜராகும் வழக்குரைஞருக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. மனுவை ஆராய்ந்து, அடுத்த விசாரணையின்போது அவா் உச்சநீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.