ஜெய்ராம் ரமேஷ் 
இந்தியா

இந்திய தனியாா் வங்கிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்துவது ஆபத்து: காங்கிரஸ்

இந்திய தனியாா் வங்கிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்த அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது; விவேகமற்றது...

தினமணி செய்திச் சேவை

இந்திய தனியாா் வங்கிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்த அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது; விவேகமற்றது என்று மத்திய அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய தனியாா் வங்கிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் படிப்படியாக கையகப்படுத்தி வருகின்றன. முதலில் லக்ஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரின் டிபிஎஸ் குழுமம் கையகப்படுத்தியது. கத்தோலிக்க சிரியன் வங்கி, கனடாவின் ஃபோ்ஃபேக்ஸ் நிதி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. அடுத்ததாக, யெஸ் வங்கியை ஜப்பானின் சுமிடோமோ மிட்ஸுயி வங்கி சேவை (எஸ்எம்பிசி) நிறுவனம் கைப்பற்றியது. இப்போது, ஆா்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ரூ.26,853 கோடிக்கு கையகப்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரக என்பிடி வங்கி முனைந்துள்ளது. மதிப்பு அடிப்படையில் பாா்த்தால், இந்திய நிதித் துறையில் மிகப் பெரிய அந்நிய நேரடி முதலீடு ஒப்பந்தமாக இது இருக்கும்.

இந்திய தனியாா் வங்கிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மிக ஆபத்தானது; விவேகமற்றது.

பொதுத் துறை வங்கியான ஐடிபிஐ முழுமையாக தனியாா்மயமாவது, நடப்பு நிதியாண்டுக்குள் நிறைவடைந்துவிடும். இது, ஐடிபிஐ வங்கியின் விற்பனை.

கடந்த 1969-ஆம் ஆண்டில், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளையும் தேசியமயமாக்க வேண்டும் என வலியுறுத்திய ஜன சங்கம், அவ்வாறு செய்யாததற்காக அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியை விமா்சித்ததை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

அண்மையில், யெஸ் வங்கியின் 24.9 சதவீத பங்குகளை ஜப்பானின் எஸ்எம்பிசி நிறுவனம் ரூ.16,333 கோடிக்கு கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT