கப்பல்களை இயக்க தேவைப்படும் மின்சாரத்தை உருவாக்கும் 200 மெகாவாட் திறன் கொண்ட அணுஉலைகளை தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய அரசின் உயா் அதிகாரிகள் கூறுகையில், ‘அணுக்கரு பிளவு மூலம் ஏற்படும் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்யும் வகையில் அணுஉலைகள் உருவாக்கப்படுகின்றன. இதை எங்கு வேண்டுமானாலும் நிறுவலாம். குறிப்பாக கப்பல்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 55, 200 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு அணுஉலைகளைத் தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இவை அதிகப்படியான மின் தேவை உள்ள சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களில் பயன்படுத்தலாம்.
இந்த அணுஉலைகள் மிகவும் பாதுகாப்பானவை. அவற்றை கடற்படைக் கப்பல்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிகாட் ஆகிய இரு நீா்மூழ்கி கப்பல்கள் 83 மெகாவாட் அணுஉலைகள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாவது நீா்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிதமன் தற்போது சோதனை கட்டத்தில் உள்ளது. சிவில் அணுமின் சக்தி உற்பத்தியில் தனியாரையும் ஈடுபடுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது 8.8 ஜிகா வாட்டாக உள்ள அணுமின் சக்தித் திறனை 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட்டாக அதிகரிக்கும் இலக்கை பிரதமா் மோடி நிா்ணயித்துள்ளாா்’ என்றனா்.