முஸ்லிம் ஆண்களை உங்கள் மகள்கள் எவ்வித தொடர்பிலும் இருக்கவே கூடாது; அவ்வாறு தொடர்பை ஏற்படுத்திருந்தால், அவர்தம் கால்களை உடையுங்கள் என்று பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சை கருத்துகளால் இந்திய அளவில் பிரபலமடைந்தவர். இந்த நிலையில், ஹிந்துக்களை முன்னிலைப்படுத்துவதற்காக அவர் அண்மையில் வெளிப்படுத்தியிருக்கும் சில கருத்துகள் பூதகர சர்ச்சையாகியுள்ளது.
என்ன சொல்லியிருக்கிறார்?
ஹிந்து மதத்தைச் சார்ந்த பெற்றோர்களுக்காக அவர் பொது நிகழ்ச்சியில் பேசிய விஷயங்கள் விடியோவாக வெளியாகியுள்ளது. அந்த விடியோவில் அவர் பேசியிருப்பவை:
“உங்கள் மனதை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் மகள் ஹிந்து அல்லாத ஒருவரைத் தேடிச் செல்ல உங்கள் மகள் முற்பட்டால்கூட, தயக்கமே வேண்டாம், அவளது கால்களை உடையுங்கள்!
எப்போதும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நமது கலாசாரத்துக்கும் மாண்புகளுக்கும் மதிப்பளிக்கத் தெரியாத இத்தகைய மகள்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது. ஆகவே, அவர்களுக்கு உடல் ரீதியாக தண்டனையளிப்பது அவசியமே” என்று பொருல்பட குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த விடியோவில், “ஹிந்து மகள் ஒருத்தி முஸ்லிம் பெண்ணாக மாறினால், அந்தப் பெண் பெற்றோரை மதிக்கவில்லை என்றே அர்த்தம். ஆகவே, பெற்றோர்கள் அந்த பெண்ணை தண்டிக்க வேண்டும்” என்றிருக்கிறார்.
“ஹிந்து பெண்களும் சிறுமிகளும் முஸ்லிம் ஆண்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். அந்த ஆண்களை இந்தப் பெண்களும் சிறுமிகளும் தங்கள் வீடுகளுக்குள் வர அனுமதிக்கக் கூடாது. சிறு பராமரிப்பு பணிகளுக்கும்கூட எந்தவொரு முஸ்லிம் நபரையும் உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காதீர்” என்று ஆர்ப்பரித்திருக்கிறார் பிரக்யா!
கடந்த காலங்களில், இத்தகைய மத வெறுப்பு பேச்சால் அவர் இழந்தவை ஏராளம். அவருக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியைக் கொன்றவரைப் புகழ்ந்து அவர் வெளியிட்டிருந்த கருத்துகளை பிரதமர் மோடி விமர்சித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.