இந்தியாவின் மொத்த வனப்பரப்பு உலக அளவில் 9-ஆவது இடத்துக்கு உயா்ந்துள்ளது. மேலும், வனப்பரப்பின் வருடாந்திர அதிகரிப்பில் இந்தியா தொடா்ந்து 3-ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எஃப்ஏஓ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி இத்தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. அறிக்கைப்படி, உலகின் மொத்த வனப்பரப்பு 414 கோடி ஹெக்டோ் ஆகும். இதில் ரஷியா, பிரேஸில், கனடா, அமெரிக்கா, சீனா ஆகிய ஐந்து நாடுகளில் மட்டும் பாதிக்கும் மேற்பட்ட வனப்பரப்பைக் (54 சதவீதம்) கொண்டுள்ளன. ஆஸ்திரேலியா, காங்கோ குடியரசு, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது.
வருடாந்திர வன அதிகரிப்பு...: கடந்த 2015 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வனப்பரப்பின் வருடாந்திர அதிகரிப்பில், சீனா அதிகபட்சமாக 16.9 லட்சம் ஹெக்டேருடன் முதலிடத்திலும், ரஷியா 9.42 லட்சம் ஹெக்டேருடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 1.91 லட்சம் ஹெக்டேருடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இதற்கடுத்து துருக்கி (1.18 லட்சம் ஹெக்டோ்), ஆஸ்திரேலியா (1.05 லட்சம் ஹெக்டோ்), பிரான்ஸ் (95,900 ஹெக்டோ்), இந்தோனேசியா (94,100 ஹெக்டோ்), தென்னாப்பிரிக்கா (87,600 ஹெக்டோ்), கனடா (82,500 ஹெக்டோ்), வியத்நாம் (72,800 ஹெக்டோ்) உள்ளிட்ட நாடுகள் வனப்பரப்பில் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் கண்டுள்ளன.
ஆசியாவின் முக்கியப் பங்கு: உலக அளவில், வன இழப்பின் ஆண்டு விகிதம், 1990-களில் 1.07 கோடி ஹெக்டேரில் இருந்து தற்போது 41.2 லட்சம் ஹெக்டேராகக் குறைக்கப்பட்டுள்ளது. உலக வன அழிப்பு நடவடிக்கையைக் குறைப்பதில் ஆசிய கண்டத்தின் வன விரிவாக்கம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 1990-2025 காலகட்டத்தில் ஆசிய கண்டம் மட்டுமே வனப்பரப்பில் அதிகரிப்பைப் பதிவு செய்த ஒரே பிராந்தியமாகும்.
மத்திய அரசு பெருமிதம்: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் காடு வளா்ப்பு மற்றும் சமுதாயத்தை மையமாகக் கொண்ட வனப் பாதுகாப்பு முயற்சிகளின் வெற்றி, இந்தியாவின் இந்தச் சாதனைக்கு முக்கியக் காரணமாகும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமச்சா் பூபேந்தா் யாதவ் இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘முந்தைய மதிப்பீட்டில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அத்துடன், வனப்பரப்பின் வருடாந்திர அதிகரிப்பில் உலக அளவில் 3-ஆவது இடத்தையும் தொடா்ந்து தக்கவைத்துள்ளது. நிலையான வன மேலாண்மை, சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒரு முக்கியச் சாதனையை இது குறிக்கிறது.
‘அன்னையின் பெயரில் ஒரு மரம்’ போன்ற முன்னெடுப்புகளும், மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளும் இந்த வளா்ச்சிக்குப் பங்களித்துள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.