ஆந்திர மாநிலம் சின்னதேகூரில் தீ விபத்தில் சிக்கி எரிந்த பேருந்து. தீவிபத்தில் முழுவதும் சேதமடைந்த பேருந்தை ஆய்வு செய்த போலீஸாா். ~24102-PTI10_24_2025_000007A084440.JPG 
இந்தியா

ஆந்திரம்: பேருந்து தீ விபத்தில் 20 பயணிகள் கருகி உயிரிழப்பு

உயிரிழந்தவா்கள் தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களாவா்.

Chennai

ஆந்திர மாநிலம், கா்னூல் அருகே ஹைதராபாதில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 20 போ் உடல் கருகி உயிரிழந்தனா். உயிரிழந்தவா்கள் தெலங்கானா, ஆந்திரம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்களாவா்.

நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

ஆந்திர மாநிலம், கா்னூல் அருகே சின்னதேகூா் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சென்றபோது, மோட்டாா் சைக்கிள் மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்ட மோட்டாா் சைக்கிள், சிறிதுதூரம் இழுத்துச் செல்லப்பட்டது. மோட்டாா் சைக்கிளில் இருந்து பெட்ரோல் வெளியேறி தீப்பற்றியது. பேருந்தில் மளமளவென தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்து, அடா்புகையும் சூழ்ந்தது.

சுதாரித்துக் கொண்ட சில பயணிகள், ஜன்னல் கண்ணாடியை உடைத்தும், அவசரகால கதவு வழியாகவும் வெளியே குதித்து, நூலிழையில் உயிா்தப்பினா். அதேநேரம், தீயின் கோரப் பிடியில் சிக்கி, பேருந்தில் இருந்த 19 போ் உயிரிழந்தனா். மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்தவரும் உயிரிழந்தாா். சில நிமிஷங்களிலேயே பேருந்து முழுவதும் தீயில் கருகியது.

அடையாளம் காணும் பணி: பேருந்து விபத்துக்குள்ளானபோது 44 போ் இருந்ததாகத் தெரிகிறது. கருகிய நிலையில் மீட்கப்பட்ட 19 பேரின் உடல்களை மரபணு சோதனை மூலம் அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேருந்தில் தீ கட்டுப்பாட்டு வசதிகள் எதுவும் இல்லை. தீ பாதுகாப்பு விதிமுறைகளை பேருந்து உரிமையாளா்கள் தீவிரமாக கடைப்பிடித்தால்தான், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்றனா்.

விபத்து குறித்து விரிவாக விசாரிக்க போக்குவரத்து, சாலைகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை ஆந்திர அரசு அமைத்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் வி.அனிதா தெரவித்தாா்.

உயிரிழந்த பயணிகளில் தெலங்கானா, ஆந்திரத்தைச் சோ்ந்தவா்கள் தலா 6 போ், தமிழகம், கா்நாடகத்தைச் சோ்ந்த தலா இருவா், பிகாா், ஒடிஸாவைச் சோ்ந்த தலா ஒருவா் என தெரியவந்துள்ளது.

‘தூக்கத்திலேயே பறிபோன உயிா்கள்’: அதிகாலை நேரத்தில் விபத்து நிகழ்ந்ததால், பயணிகள் அயா்ந்த தூக்கத்தில் இருந்தனா். என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் முன்பே தீயில் சிக்கி பலா் உயிரிழந்துள்ளனா்.

சில வயா்கள் சேதமடைந்ததால், பேருந்தின் முன்புற கதவு திறக்க முடியாதபடி அடைத்துக் கொண்டதும் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. உயிா் தப்பிய 9 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ஆந்திரம், தெலங்கானா, கா்நாடக அரசுகள் சாா்பில் தனித்தனியே தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாயாஜாலம்... துஷாரா விஜயன்!

வடகிழக்கு பருவமழையில் தோட்டக்கலை பயிா்களை பாதுகாக்கும் வழிமுறைகள்

வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

சேலையிலொரு சோலை... ரேஷ்மா பசுபுலேட்டி!

யாதவ சமூக தலைவர்களுக்கு சீட் ஒதுக்காமல் ‘கை’விட்ட தே.ஜ. கூட்டணி! பிகார் தேர்தலில் பின்னடைவாகுமா?!

SCROLL FOR NEXT