குளிர்காலம் தொடங்கியதையடுத்து அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுத் திறப்பு விழா கண்ட ராமர் கோயிலில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், குளிர்காலத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் தரிசன நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயில் காலை 6.00 மணிக்குப் பதிலாக காலை 6.20 மணிக்குப் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர், பின்னர் இரவு 9.00 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணி வரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மூன்று ஆரத்திகளின் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. மங்கள ஆரத்தி அதிகாலை 4:30 மணிக்கும், சிருங்கர் ஆரத்தி காலை 6:30 மணிக்கும், சயன ஆரத்தி இரவு 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை கோயில் நடை மூடப்படும். அதன்பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு நடை திறக்கப்படும். அக்டோபர் 23 முதல் மாற்றப்பட்ட தரிசன நேரம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதற்கிடையில், மூன்று ஆரத்திகளில் கலந்துகொள்ள நவம்பர் 7 வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளில் மூன்று ஆரத்திகளுக்கு கோயில் அறக்கட்டளை அதன் போர்டல் வழியாக 60 பாஸ்களை வழங்குகிறது. இதேபோல், பக்தர்களுக்கான தரிசன நேரத்தைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக வரிசையான சுகம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய விரும்புவோருக்கும் நவம்பர் 7 வரை முன்பதிவு செய்யப்படுகிறது. ராமர் கோயில் அறக்கட்டளை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, ஒரு நாளில் 325 பக்தர்களுக்கு சுகம் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.