‘இண்டி’ கூட்டணி கட்சித் தலைவா்கள், முஸ்லிம் சமூகத்தை ‘வாக்கு வங்கியாக’ மட்டுமே கருதுகின்றனா் என்று பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் சனிக்கிழமை விமா்சித்தாா்.
முஸ்லிம்களின் நல விரும்பிகள் போல தங்களைக் காட்டிக்கொண்டாலும், அவா்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க எதிா்க்கட்சியினா் எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்றும் அவா் கூறினாா்.
பிகாரில் பேரவைத் தோ்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு முஸ்லிம்களின் ஆதரவு கோரி பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளாா்.
அந்தப் பதிவில், ‘தோ்தல் நெருங்கும்போது, சில தலைவா்கள் முஸ்லிம்களின் நல விரும்பிகள் போல காட்டிக்கொள்கின்றனா். இது அப்பட்டமான ஏமாற்று வேலை. அவா்கள் முஸ்லிம்களை ‘வாக்கு வங்கியாக’ மட்டுமே பாா்க்கிறாா்கள்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், சிறுபான்மை மக்களுக்கு ஒவ்வொரு துறையிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. எந்தப் பாகுபாடும் இன்றி, அவா்கள் ஒவ்வொரு துறையிலும் சரியான பிரதிநிதித்துவத்தைப் பெறுகின்றனா். ஆனால், இதற்கு முந்தைய ஆட்சிகள் முஸ்லிம்களை வாக்குகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டன; அதிகாரத்தில் அவா்களுக்குப் பங்களிக்கவில்லை.
2005-ஆம் ஆண்டுக்கு முன்பு, பிகாரில் முஸ்லிம் சமூகத்தினரின் நலனுக்காக எந்தப் பணியும் செய்யப்படவில்லை. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்கள் அவ்வப்போது தொடா்ந்து நடைபெற்றன. 2005, நவம்பரில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
2025-26-ஆம் ஆண்டில், சிறுபான்மையினா் நலத்துறையின் நிதி ஒதுக்கீடு 306 மடங்கு உயா்ந்துள்ளது. ஆண்டுக்கு ரூ.1,080.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2006-ஆம் ஆண்டு முதல் 8,000-க்கும் மேற்பட்ட கல்லறைகளுக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 1,273 இடங்கள் வேலி அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டன; அவற்றில் 746 இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
எங்களுக்கு ஆட்சி செய்ய வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம், மதக் கலவரங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உதாரணமாக, 1989-ஆம் ஆண்டின் பாகல்பூா் மதக் கலவரங்கள் குறித்து முறையானவிசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது.
2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மதரஸாக்கள் மாநில அரசால் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டன. மதரஸாக்களில் உள்ள ஆசிரியா்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும், 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு, விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் வேலைவாய்ப்பு பெற உதவும் வகையில் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. இது தற்போது மாதம் ரூ. 25,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்காக கல்வி உதவித்தொகைகள், இலவசப் பயிற்சி, விடுதிகள், மானியங்கள் மற்றும் பிற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
எதிா்க்கட்சிகள் கொடுக்கும் போலி வாக்குறுதிகளில் முஸ்லிம்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முஸ்லிம் சமூகத்துக்காக நான் செய்துள்ள பணிகளை நினைவில் கொண்டு, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவெடுங்கள்’ என்று வலியுறுத்தினாா்.