பிகாரில் எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிகாரை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றுவேன் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
ஆர்ஜேடியின் பர்பட்டா வேட்பாளர் சஞ்சீவ் குமாரை ஆதரித்து ககாரியா மாவட்டத்தில் உள்ள கோக்ரியில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய யாதவ், அரசு அமைப்பதற்காக மட்டுமல்ல, மாநிலத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறினார்.
பிகாரை முதலிடத்தில் கொண்டுவர வேண்டும், அதற்காக முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும், கல்வியை மேம்படுத்த வேண்டும். சரியான சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
நிலப் பற்றாக்குறை இருப்பதால் பிகாரில் தொழிற்சாலைகளை அமைக்க முடியாது என்று மூத்த பாஜக தலைவர் கூறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை யாதவ் விமர்சித்தார்.
மாநிலத்தில் தொழிற்சாலைகளை அமைத்து, பிகாரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதலீட்டைக் கொண்டு வருவோம் என்று அவர் கூறினார்.
பிரதமர் மோடியும், அமித் ஷாவும் முதல்வர் நிதிஷ் குமாரை கடத்திச் சென்றதாக அவர் குற்றம் சாட்டினார். அவர் இனி பிகாரை வழிநடத்த முடியாது என்றார்.
மாவட்டத்தின் அலாவுலி தொகுதியில் மற்றொரு பேரணியில் உரையாற்றிய ஆர்ஜேடி தலைவர், ஜூலை முதல் டிசம்பர் வரை வெள்ளம் காரணமாக இந்தப் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. விவசாயிகள் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் முதல்வர் உள்பட யாரும் இங்கு வருவதில்லை.
நீர் தேங்கும் பிரச்னையை நிரந்தரமாக அகற்ற சரியான வடிகால் வசதிகளை நான் உறுதி செய்வேன் என்று வாக்காளர்களுக்கு அவர் உறுதியளித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிகாரில் 21 ஆண்டுகளாகவும், மத்திய அரசில் 11 ஆண்டுகளாகவும் உள்ளது, ஆனால் அலாவுலியில் எந்த கல்லூரியும் அமைக்கப்படவில்லை.
நான் முதல்வராக வந்ததும், மாணவர்கள் படிக்க வெளியே செல்ல வேண்டிய அவசியமிருக்காது. இங்குப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவுவேன்.
பிகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசு வேலைகளை வழங்க 20 நாள்களுக்குள் ஒரு சட்டம் இயற்றப்படும் என்றும், 20 மாதங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்படும்/
வேலையில்லாத பட்டதாரிகளின் வலியை என்னால் பார்க்க முடியவில்லை. வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகளை வழங்குவதற்கான நிதியை எங்கிருந்து கொண்டு வருவேன் என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, சில நாள்களில் எனது திட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று அவர் கூறினார்.
எங்கள் அரசு ஆட்சியமைத்த சில வாரங்களுக்குள் பெண்களுக்கு ஒரே தவணையில் ஆண்டுக்கு ரூ. 30,000 வழங்குவதுடன் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சமூக அணிதிரட்டல் செய்பவர்களின் சேவைகளை முறைப்படுத்துவதாகவும் யாதவ் தனது வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிக்க: அக்.28 வரை கனமழை தொடரும்: வானிலை எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.