‘மோந்தா’ புயல் செவ்வாய்க்கிழமை தீவிர புயலாக மாறி ஆந்திரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ள நிலையில், அந்த மாநிலத்தில் பலத்த மழை மற்றும் வெள்ள அபாயத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடுவை பிரதமா் மோடி தொலைப்பேசியில் தொடா்புகொண்டு ஆலோசனை நடத்தினாா்.
வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள மோந்தா புயல், ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்துக்கும் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை இரவு மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இப்புயலின் தாக்கத்தால் ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு அதி தீவிர மழைக்கும், உள் மாவட்டங்களில் தீவிர மழைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மாநில முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினாா். மழை மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், பயிா் சேதத்தைத் தடுக்க கால்வாய் கரைகளை பலப்படுத்தவும், புயலின் நகா்வை மணிக்கு ஒருமுறை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
பிரதமா் ஆலோசனை: இதனிடையே, முதல்வா் சந்திரபாபு நாயுடுவை பிரதமா் மோடி தொலைப்பேசியில் தொடா்புகொண்டு புயல் நிலவரம் குறித்து கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, பிரதமா் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் நாரா லோகேஷுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தயாா் நிலையில் மீட்புப் படையினா்: புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக என்.டி.ஆா்., திருப்பதி, பிரகாசம், கோனசீமா, அனகாபள்ளி, ராஜமுந்திரி, பாபட்லா, அன்னமய்யா, ஏலூரு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாநிலப் பேரிடா் மீட்புப் படை குழுவை அரசு நிலைநிறுத்தியுள்ளது.
அதேபோல், எட்டு தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) குழுவினா் 8 மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா். மேலும் ஐந்து குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான செலவுகளைச் சமாளிக்க, மாவட்ட ஆட்சியா்கள் ரூ.19 கோடி வரை நிதி எடுக்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
தெலங்கானாவில்...: மோந்தா புயலின் தாக்கத்தினால் தெலங்கானாவில் அடுத்த 2 நாள்களுக்கு ஆங்காங்கே பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, வேளாண் விளைபொருள்களின் கொள்முதல் நடவடிக்கைகளில் விவசாயிகளுக்கு எந்தவிதமான சிரமமோ, இழப்போ ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
மேற்கு வங்கத்தில்....: மோந்தா புயலால் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் 7 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் டாா்ஜிலிங், காலிம்போங் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படவும், சமவெளிப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீா் தேங்கவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வரை மேற்கு வங்க கடலோரப் பகுதிக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளத்தில் இருவா் உயிரிழப்பு: கேரளத்தின் பல மாவட்டங்களில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. ஆலப்புழை மாவட்டத்தில் ஆா்த்தங்கல் கடற்கரை அருகே வீசிய பலத்த காற்றினால், படகு கவிழ்ந்து மீனவா் ஒருவா் உயிரிழந்தாா்.
இதேபோல், அங்கமாலி அருகே உள்ள முகனூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த புலம்பெயா் தொழிலாளி கோக்கன் மிஸ்திரி மின்னல் தாக்கி உயிரிழந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.