சென்னை: வங்கக் கடலில் உருவான மோந்தா புயல், இன்னும் 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெறவிருக்கும் நிலையில், ஆந்திரத்தில் கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.
கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, நெல்லூர் உள்ளிட்ட கடற்கரைகள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆந்திர மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடலோரங்களில் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது.
சென்னைக்கு தென்கிழக்கில் 500 கிலோ தொலைவில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி ஆந்திரத்தில் மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகே செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவில் தீவிரப் புயலாக கரையைக் கடக்கிறது.
புயல் கரையைக் கடக்கும் போது காற்றானது மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா, கோனா சீமா, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பப்தாலா, பிரகாசம், நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் இரண்டு நாள்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரம் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் 128 பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவில், ஆந்திர மாநிலத்தில் புயலானது தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிவப்பு எச்சரிக்கை
ஆந்திர மாநிலத்துக்கு அக். 27, 28, 29ஆம் தேதிகளும், ஒடிசா மாநிலத்துக்கு அக். 28 மற்றும் 29ஆம் தேதிகளும் தெலங்கானா மற்றும் சத்தீஸ்கரில் அக்.28ஆம் தேதி மட்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு அக். 27 மற்றும் 28ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கையும் கர்நாடகத்துக்கு இதே நாள்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க... மோந்தா புயல்: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.