தில்லியில் ஆண்நண்பரை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொலைசெய்த பெண் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தில்லியின் திமார்பூர் நகரில் காந்தி விகார் பகுதியில் தங்கி, அரசுத் தேர்வுக்கு ராம் கேஷ் மீனா (32) படித்து வந்தார். இவருக்கும் அம்ரிதா சௌஹான் (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் லிவின் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதியில் ராம் கேஷ் வசித்து வந்த குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டதாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இருப்பினும், ராம் கேஷின் வீட்டுக்குள் நுழைந்த தீயணைப்புத் துறையினர், ராம் கேஷின் உடலை கருகிய நிலையில்தான் மீட்டனர்.
இந்த தீவிபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்த போது, தீவிபத்துக்கு முன்னதாக ராம் கேஷின் வீட்டுக்குள் 3 பேர் சென்றது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் அம்ரிதா என்பதும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்து நடத்திய விசாரணையில், அம்ரிதா உள்பட அவரின் நண்பர்கள் இருவரும் சேர்ந்துதான் ராம் கேஷை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
ராம் கேஷுடன் ஒன்றாக வசித்துவந்த சமயங்களில், அம்ரிதாவின் தனிப்பட்ட அந்தரங்க விடியோக்களை ராம் கேஷ் பதிவுசெய்து வைத்திருந்ததாக அம்ரிதா கூறினார். அதனை அழிக்குமாறு அம்ரிதா கூறியும், ராம் கேஷ் மறுத்ததாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, ராம் கேஷை கொலை செய்ய திட்டமிட்ட அம்ரிதா, தனது முன்னாள் காதலன் மற்றும் மற்றொரு ஆண் நண்பரையும் திட்டத்தில் உடன்சேர்த்துக் கொண்டார்.
ராம் கேஷை கொலைசெய்தாலும், அது ஒரு தீவிபத்து போல இருக்க வேண்டும் என்று அவர்கள் திட்டம் தீட்டினர். அம்ரிதா - தடயவியல் அறிவியல் மாணவராகவும், அவரின் முன்னாள் காதலரான சுமித் - எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் பணிபுரிந்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து, ராம் கேஷை அடித்துக் கொலைசெய்து விட்டு, அவரது உடல் தீயில் கருகிவிட வேண்டும் என்பதற்காக உடல் மீது மண்ணெண்ணெய், நெய், ஒயினையும் ஊற்றியுள்ளனர். பின்னர், ஒருமணி நேரம் கழித்து வெடிக்கும்வகையில், ராம் கேஷின் தலையருகே சிலிண்டரை வைத்துவிட்டு, நெருப்பைப் பற்றவைத்து விட்டு, மூவரும் அங்கிருந்து தப்பித்து விட்டனர்.
மேலும், ராம் கேஷின் மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்க் உள்பட சில பொருள்களையும் கைப்பற்றிவிட்டுத் தப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுமித் மற்றும் சந்தீப்பையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிக்க: டிஜிட்டல் கைது! அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிசீலனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.