புது தில்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பணப் பயன்களை மாற்றியமைக்க 8வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், இன்று பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்த 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ், 8வது ஊதியக் குழுவின் தலைவராக செயல்படுவார். மேலும் பேராசிரியர்கள் புலாக் கோஷ், பங்கஜ் ஜெயின் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கி, அடுத்த 18 மாதங்களில் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இக்குழு வழங்கும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
7வது ஊதியக் குழு, கடந்த 2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தன. அதன் பதவிக் காலம் 2026ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், தற்போது 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டு, ஆணையத்தின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.