உத்தர பிரதேச மாநிலம் ராம்பூா் மாவட்டத்தில் கடந்த 2007, டிச.31-ஆம் தேதி மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) முகாம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்திய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரையும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரையும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அலாகாபாத் உயா்நீதிமன்றம் விடுவித்தது.
விசாரணையில் குறைபாடுகள் உள்ளதால் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. எனினும், ஆயுதங்கள் சட்டம் பிரிவு 25 (1-ஏ)-இன்கீழ் அவா்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
ராம்பூா் மாவட்டத்தில் 2007, டிச.31-ஆம் தேதி இரவு சிஆா்பிஎஃப்) முகாம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் ஓம் பிரகாஷ் 2008, ஜன.1-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) பதிவுசெய்தாா். அதனடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ஷரீஃப், இம்ரான் ஷாஜத், முகமது ஃபரூக், சபாவுதீன் மற்றும் ஜங் பகதூா் கான் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
இவா்களில் ஜங் பகதூருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.50,000 அபராதமும் மீதமுள்ள நான்கு பேருக்கு மரண தண்டனையும் தலா ரூ.50,000 அபராதமும் விதித்து விசாரணை நீதிமன்றம் 2019, நவ.1 மற்றும் 2-இல் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து 5 பேரும் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுக்களை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பெயா்களை எப்படி மற்றும் எப்போது காவல் துறை அறிந்துகொண்டது என்பதை நீதிமன்றத்துக்கு சமா்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் விசாரணை அதிகாரிகள் தெளிவாக குறிப்பிடவில்லை. எனவே, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள்தான் இந்த தாக்குதலை நிகழ்த்தினாா்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவா்கள் விடுதலை செய்யப்படுகின்றனா்’ என்று தெரிவித்தது.