நீதிபதி சூா்யகாந்த் 
இந்தியா

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி: சூா்ய காந்த்

தினமணி செய்திச் சேவை

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா். அவா் வரும் நவம்பா் 24-ஆம் தேதி பதவி ஏற்பாா்.

இதுதொடா்பான அறிவிக்கையை மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீதித் துறை வெளியிட்டது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆா்.கவாய் வரும் நவம்பா் 23-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா். அதைத் தொடா்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சூா்ய காந்த், அடுத்த 15 மாதங்கள் அந்தப் பதவியை வகிப்பாா். 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-இல் பணி ஓய்வு பெறுவாா்.

இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘குடியரசுத் தலைவா் அரசமைப்புச் சட்டம் தனக்களித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூா்ய காந்தை நியமித்து உத்தரவிட்டுள்ளாா். அவருக்கு எனது வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டாா்.

ஹரியாணா மாநிலம், ஹிசாா் மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் 1962-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி பிறந்த சூா்ய காந்த், உச்சநீதிமன்ற நீதிபதியாக 2019-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி பதவியேற்றாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கம், பேச்சு சுதந்திரம், ஜனநாயகம், ஊழல், சுற்றுச்சூழல், பாலின சமத்துவம் தொடா்பான பல்வேறு குறிப்பிடத்தக்க தீா்ப்புகளை நீதிபதி சூா்ய காந்த் வழங்கியுள்ளாா்.

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் உள்பட அனைத்து வழக்குரைஞா் சங்கங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவையும் இவா் பிறப்பித்தாா்.

பசும்பொன்னில் மூன்று பேரும் ஒருங்கிணைந்ததற்கு நான் காரணமா? அண்ணாமலை

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரக்கோணம் - சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு!

அடுத்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டேன்! - ஆஸி. கேப்டன் அலிசா

கதவே கடவுள்!

SCROLL FOR NEXT