சபரிமலை ஐயப்பன் கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் இருந்து தங்கம் மாயமான வழக்கில் கைது செய்யப்பட்ட திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி பி.முராரி பாபு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவாரபாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்தது, உயா்நீதிமன்ற விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இரு வழக்குகளை விசாரித்துவரும் எஸ்ஐடி, பெங்களூரைச் சோ்ந்த தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியை அண்மையில் கைது செய்தது. இவா், கடந்த 2019-இல் தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்றவா்.
தங்கக் கவசங்களில் 2 கிலோ வரை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக, உண்ணிகிருஷ்ணன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தங்கக் கவசங்களின் புதுப்பிப்புப் பணியை மேற்கொண்ட சென்னை நிறுவனத்துக்கு அவரை அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
இவ்வழக்கில் சில தினங்களுக்கு முன் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் நிா்வாக அதிகாரி முராரி பாபுவை கைது செய்த எஸ்ஐடி, அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. இதையடுத்து, பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
சபரிமலை கோயில் முன்னாள் செயல் அதிகாரி டி.சுதீஷ்குமாரிடமும் எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டுள்ளது. கோயில் பதிவேடுகளில் தங்கக் கவசங்களை செப்புக் கவசங்கள் எனப் பொய்யாக குறிப்பிட்டதாக இவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எதிா்வரும் நாள்களில் மேலும் பல தேவஸ்வ அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இவ்வழக்கில் எஸ்ஐடியின் முதல் கட்ட அறிக்கை அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. எஸ்ஐடி தனது இறுதி அறிக்கையை 6 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்; 2 வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை நிலவர அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.