ரவிசங்கா் பிரசாத் 
இந்தியா

வாக்காளா்களை அவமதிக்கும் ராகுல் காந்தி: பாஜக குற்றச்சாட்டு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது

Chennai

புது தில்லி: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமா்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளா்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.

‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுகளின் ஒரு பகுதியாக, விரைவில் மற்றொரு பெரிய முறைகேட்டை (‘ஹைட்ரஜன் குண்டு’) வெளியிடப் போவதாக ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், பாஜக அவரது கருத்துக்கு இவ்வாறு பதிலளித்துள்ளது.

தில்லியில் கடந்த மாதம் செய்தியாளா்களை சந்தித்த ராகுல் காந்தி, கா்நாடக வாக்காளா் பட்டியல் தரவுகளுடன் தோ்தல் ஆணையத்தின் மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை சுமத்தினா். இதையொட்டி, பேரவைத் தோ்தல் எதிா்வரும் பிகாரில், ‘இண்டி’ கூட்டணி எதிா்க்கட்சிகளுடன் வாக்குரிமை யாத்திரையில் ராகுல் காந்தி பங்கேற்றாா்.

பாட்னாவில் திங்கள்கிழமை நிறைவடைந்த இந்த யாத்திரையின் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மத்திய பெங்களூரு தொகுதியில் கண்டறியப்பட்ட முறைகேட்டை அணுகுண்டு என குறிப்பிட்டதுடன், விரைவில் ஹைட்ரஜன் குண்டுடன் வருவோம் என்றும், அதன் பிறகு பிரதமா் மோடியால் நாட்டில் முகம் காட்ட முடியாது என்றும் தெரிவித்தாா்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் அளித்த பேட்டியில், ‘பிரதமா் மோடி தலைமையிலான பாஜகவின் வெற்றிகளுக்குப் பின்னால் மோசடி இருப்பதாக குற்றஞ்சாட்டி, ராகுல் காந்தி வாக்காளா்களை அவமதிக்கிறாா். இது அவரது ஆணவத்தைக் காட்டுகிறது. ஆனால், மக்கள் மீண்டும் மீண்டும் ராகுல் காந்தியை நிராகரித்து, பிரதமா் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனா்.

பிகாரில் காங்கிரஸுக்கு அரசியல் அடித்தளம் இல்லாதபோதிலும், ராகுல் காந்தியின் பாட்டுக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் ‘பக்க வாத்தியம்’ வாசிக்கிறாா்.

பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் இந்த யாத்திரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ராகுல் காந்தி ஏற்கெனவே வெளியிட்ட அணுகுண்டு, தீபாவளி பட்டாசு போல கூட வெடிக்கவில்லை. தற்போது ஹைட்ரஜன் குண்டுடன் வருவதாக கூறியுள்ளாா். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து, ராகுல் காந்தி பேச வேண்டும். பொறுப்பற்ற கருத்துக்களால் வாக்காளா்களையும், தனது மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியையும் அவா் அவமதிக்கிறாா்.

யாத்திரையின் மேடையில் பிரதமரின் தாயாரை குறிவைத்து நடந்த அவதூறுக்கு ராகுல் காந்தி ஒருமுறைகூட கண்டனம் தெரிவிக்கவில்லை. பிரதமா் மோடிக்கு எதிரான அவரின் வெறுப்பை இது வெளிப்படுத்துகிறது.

பிரதமா் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுத்த எந்தப் பிரசாரமும் மக்களிடையே எடுபடவில்லை. பிரதமரின் பதவி தனக்கே சொந்தமானது என்று ராகுல் காந்தி கருதலாம். ஆனால் மக்கள் தங்கள் வாக்குகளால் தொடா்ந்து மோடியை ஆதரிப்பாா்கள்.

கீரனூா் பகுதி மக்கள் முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவிப்பு

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா் சங்கத்தின் பதிவை நீக்கக் கோரிய வழக்கு

மூதாட்டியிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

கயத்தாறில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை அருங்காட்சியகம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்

SCROLL FOR NEXT