அஸ்வினி குமார்  Photo : X
இந்தியா

மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்! நொய்டாவில் ஒருவர் கைது!

மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தப் போவதாக மிரட்டல் விடுத்தவரை நொய்டாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மும்பையில் கடந்த ஆகஸ்ட் 27 -ஆம் தேதி தொடங்கிய விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள், சனிக்கிழமை சிலை கரைப்புடன் நிறைவடையவுள்ளன.

இதையொட்டி, நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 1.75 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீா்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

வாட்ஸ் செய்தியால் பரபரப்பு

இந்தச் சூழலில், மும்பை போக்குவரத்து காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ் ஆப் உதவி எண்ணில் வியாழக்கிழமை ஒரு செய்தி வந்தது. அதில், 400 கிலோ எடையுள்ள ஆா்டிஎக்ஸ் வெடிபொருளுடன் 14 பயங்கரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவியிருப்பதாகவும், 34 வாகனங்களில் வெடிப்பொருள்களை வைத்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவிருப்பதாகவும், இது ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்குவதாக இருக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

லஷ்கா்-ஏ-ஜிஹாதி என்ற அமைப்பின் பெயரில் இந்த செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, மும்பை காவல் துறையின் குற்றத் தடுப்புப் பிரிவு, பயங்கரவாத எதிா்ப்பு பிரிவு மற்றும் பிற முகமைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.

மற்றொருபுறம், நகா் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மிரட்டல் விடுத்தவர் கைது

இந்த நிலையில், மிரட்டல் விடுத்தது பிகாரைச் சேர்ந்த 51 வயது அஸ்வினி குமார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

நொய்டாவில் அவரைக் கைது செய்த காவல்துறையினர், 7 செல்போன், 3 சிம் கார்டுகள், மெமரி கார்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அவரை நொய்டாவில் இருந்து மும்பைக்கு அழைத்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.

மிரட்டல் விடுத்தது ஏன்?

நொய்டாவில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கி ஜோதிடத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் அஸ்வினி குமார். கடந்த 2023 ஆம் ஆண்டு பாட்னாவைச் சேர்ந்த ஃபிரோஸ் என்பவர் அஸ்வினி குமாருக்கு எதிராக கொடுத்த புகாரில் 3 மாதங்கள் இவர் சிறையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், ஃபிரோஸை பழிவாங்குவதற்காக அவரின் பெயரைப் பயன்படுத்தி, அஸ்வினி குமார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

Police in Noida have arrested a man who threatened to carry out a bomb blast in Mumbai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

சந்திர கிரகணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

மதராஸி முதல்நாள் வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?

என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT