நாட்டையே உலுக்கிய மேகாலயா தேனிலவுக் கொலை வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவினர், விசாரணையை முடித்து, 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி, காதலர் ராஜ் குஷ்வாஹா உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேகாலயா காவல்துறை கூறுகையில், இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், 790 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரும் தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சோனம் மற்றும் ராஜ் தவிர, மற்ற மூன்று பேரும், மே 23ஆம் தேதி தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்ய, மனைவிக்கு உதவியதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்தல், சாட்சிகளை மறைத்தல், குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக ஒன்றாக சதி செய்தல் உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடயவியல் அறிக்கைகள் வெளிவந்ததும், சோனம் மறைந்திருக்க உதவியக் குற்றச்சாட்டு உள்ள இணைக் குற்றவாளிகள் மூன்று பேர் மீது, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை கூறியிருக்கிறது. இவர்கள் மூவரும் தற்போது பிணையில் உள்ளனர்.
வழக்குத் தொடங்கியது என்னவோ, தேனிலவு சென்ற தம்பதியைக் காணவில்லை என்றுதான். மேகாலயத்துக்கு தேனிலவு சென்ற ராஜா (29), சோனம் (24) எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என குடும்பத்தினர் காவல்துறையை தொடர்பு கொண்டனர். இவர்களுக்கு மே 11ஆம் தேதி திருமணமான நிலையில், மேகாலயம் சென்றவர்கள், மே 23ஆம் தேதி காணாமல் போயினர்.
அவர்களைத் தேடியபோது, ஜூன் 2ஆம் தேதி ராஜா ரகுவன்ஷி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சோனத்தை தொடர்ந்து தேடி வந்தார்கள். அவரும் இறந்திருக்கக் கூடும் என நினைத்தனர். ஆனால், ஜூன் 8ஆம் தேதி நந்த்கஞ்ச் காவல்நிலையத்தில் அவரே சரணடைந்தார். அப்போதுதான், கொலைக்கு உதவியதாக மேலும் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர். விசாரணைக்குப் பிறகே, சோனம் காதலர் ராஜ் கைதானார். ஜூன் 11ஆம் தேதி, சோனம், தன்னுடைய கணவர் ராஜாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் மே மாதம் நடைபெறவிருந்த நிலையில், சோனம், பிப்ரவரி மாதமே, தன்னுடைய காதலனுடன் சேர்ந்து கொலைத் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தபோது, ராஜா ரகுவன்ஷியின் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ந்து போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... பணமதிப்பிழப்பு நோட்டுகள் மூலம் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வழக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.