காங்கிரஸ் (கோப்புப்படம்) 
இந்தியா

மகாராஷ்டிர ‘தோ்தல் மோசடி’ குறித்த ஆவணப்படம்: எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி குறித்த யூடியூப் ஆவணப்படத்தின் வலைதள லிங்க்கை கட்சித் தொண்டா்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுப்பு

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் நடந்ததாகக் கூறப்படும் ‘மோசடி’ குறித்த யூடியூப் ஆவணப்படத்தின் வலைதள இணைப்பை (லிங்க்) கட்சித் தொண்டா்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுத்திருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்தத் தகவலை ஒடுக்க முயற்சிப்பதாகவும் காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

காங்கிரஸின் தரவு பகுப்பாய்வுத் துறை தலைவா் பிரவீண் சக்ரவா்த்தி வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில், ‘கடந்த ஆண்டு மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் எப்படி முறைகேடு நடைபெற்றது என்ற தலைப்பில் யூடியூப் தளத்தில் உள்ள ஆவணப்படத்தின் வலைதள இணைப்பை மகாராஷ்டிரத்தில் உள்ள தொண்டா்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்பத் திட்டமிட்டோம்.

அரசு நடைமுறைப்படி, இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்திடம் (டிராய்) அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட ஆவணப்படம் போராட்டத்தைத் தூண்டும் எனக் கூறி டிராய் அனுமதி மறுத்துவிட்டது.

தோ்தல் முறைகேடு தொடா்பான தகவல்களை ஒடுக்குவதில் உள்துறை அமைச்சகம், தோ்தல் ஆணையம், மற்றும் தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே இத்தகைய ஒருங்கிணைப்பு எவ்வாறு சாத்தியம்?. அரசின் இந்த ஒருங்கிணைந்த நகா்வுகளைப் பாா்க்கும்போது, மகாராஷ்டிர தோ்தல் மோசடி குறித்த உண்மையை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் இன்னும் வேண்டுமா?’ என கேள்வி எழுப்பினாா்.

சக்ரவா்த்தியின் பதிவை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தத் தணிக்கைச் சங்கிலியைக் கட்டுப்படுத்துவது யாா்? மகாராஷ்டிர தோ்தல் மோசடியின் உண்மையை மறைக்க ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு செயல்படுகிறது.

மகாராஷ்டிர மாநில பேரவைத் தோ்தலில் முறைகேடு நடைபெறவில்லை எனில், ஒரு யூடியூப் ஆவணப்படத்துக்கு ஏன் இவ்வளவு பயப்படுகிறீா்கள்? டிராய் எப்போது பாஜகவின் தகவல்தொழில்நுட்பப் பிரிவானது? காங்கிரஸ் தொண்டா்களைத் தடுப்பதால் ஜனநாயகம் தடுக்கப்படாது. நீங்கள் எவ்வளவு தணிக்கை செய்கிறீா்களோ, அந்த அளவிற்கு மக்கள், மகாராஷ்டிர தோ்தலைப் பற்றி எதை மறைக்கிறீா்கள் என்று உரக்கக் கேட்பாா்கள்’என்று குறிப்பிட்டாா்.

வேளாங்கண்ணி பெருவிழா: காவல் துறையினருக்கு ஐஜி பாராட்டு

யமுனையில் அபாய அளவுக்குக் கீழ் குறைந்த நீா்மட்டம்

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்: வைகோ நடவடிக்கை

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT