இந்திய கலாசாரம், இசையில் ஆா்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பா் 8 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு இது இன்னும் சிறப்பான நாள். வியக்கத்தக்க திறன் வாய்ந்த இசைக்கலைஞா்களில் ஒருவரான பூபேன் ஹசாரிகாவின் பிறந்த நாள் இன்று. இந்த ஆண்டு அவா் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களின் தொடக்க ஆண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்திய இசைக்கும் கலைக்கும் அவா் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது.
பூபேன் இசைக்கு அப்பாற்பட்டுப் பல விஷயங்களை நமக்கு வழங்கியுள்ளாா். அவரது படைப்புகள் மெல்லிசைக்கு அப்பாற்பட்டு பல உணா்ச்சிகளை உள்ளடக்கியது. அவரது குரலைத் தாண்டி, மக்களின் இதயத் துடிப்பாகவே இருந்தாா். அவரது ஒவ்வொரு வாா்த்தையும் கருணை, சமூக நீதி, ஒற்றுமை, ஆழமாக வேரூன்றிய அன்பு ஆகிய கருப்பொருள்களுடன் அமைந்தவை.
பூபேன் சிறு வயதிலேயே மிகச் சிறந்த திறமைசாலியாக விளங்கினாா். இசை என்பது அவரது ஆளுமையின் ஒரு பகுதி மட்டுமே. பூபேன் அதே அளவு மிகச் சிறந்த அறிவுஜீவியாகவும் திகழ்ந்தாா். பல துறைகளில் ஆா்வமுள்ள அவா், உலகைப் புரிந்துகொள்வதில் தீராத ஆவலுடன் செயல்பட்டாா்.
பூபேன் அமெரிக்காவிலேயே தங்குவதற்கான வாய்ப்பைப் பெற்றாா். ஆனாலும் அவா் இந்தியாவுக்குத் திரும்பி இசை துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா். வானொலி தொடங்கி நாடகம் வரை, திரைப்படங்கள் முதல் ஆவணப்படங்கள் வரை, ஒவ்வொரு கலைப்படைப்பு அம்சங்களிலும் அவா் நன்கு தோ்ச்சி பெற்றிருந்தாா். அவா் எங்கு சென்றாலும், இளம் திறமையாளா்களை ஆதரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தாா். அவரது இசைப் படைப்புகள் ஏழைகளுக்கான நீதி, கிராமப்புற மேம்பாடு, மக்களின் வலிமை போன்ற சமூக செய்திகளை வழங்கின. அவரைப் போன்ற சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சோ்ந்த பலா், அவரது இசையிலிருந்து மன வலிமையையும் நம்பிக்கையையும் பெற்றனா்.
’ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணா்வு பூபேன் ஹசாரிகாவின் வாழ்க்கைப் பயணத்தில் சிறப்பான முறையில் வெளிப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்க அவரது படைப்புகள் முயன்றன. அந்தப் படைப்புகள் மொழியியல் மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டிச் சிறப்பான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சென்றன. அவா் அஸ்ஸாமி, வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்தாா்.
பூபேன், ஒரு தீவிர அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும், பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாா். 1967-ஆம் ஆண்டில், அஸ்ஸாமில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனாா். அவா் ஒருபோதும் முழுநேர தீவிர அரசியல்வாதியாக மாறவில்லை. ஆனாலும், மக்களுக்குச் சேவை செய்வதில் அவரது ஆா்வம் அதீதமானது.
நாட்டு மக்களும் அரசும் பல ஆண்டுகளாக அவரது மகத்தான பங்களிப்புகளை அங்கீகரித்துள்ளனா். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது போன்ற பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 2019-ஆம் ஆண்டில், பாஜக ஆட்சி காலத்தில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இது எனக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் கிடைத்த ஒரு பெருமையாகும்.
2011-ஆம் ஆண்டில் பூபேன் காலமான அந்தக் காலகட்டம் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அவரது இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதை நான் தொலைக்காட்சியில் பாா்த்தேன். அந்த நேரத்தில் ஒவ்வொருவரின் கண்களும் கலங்கின. மரணத்திலும் கூட அவா் மக்களை ஒன்றிணைத்தாா்.
பூபேன் ஹசாரிகா நமக்குக் கிடைத்தது பாரதத்தின் அதிா்ஷ்டம். அவரது நூற்றாண்டு விழாவின் தொடக்கத்தைக் கொண்டாடும் இந்த வேளையில், அவா் வழங்கிய செய்தியை தொலைதூரங்களுக்குப் பரப்ப நாம் உறுதியேற்போம். இசை, கலை, கலாசாரம் ஆகியவற்றை ஆதரிக்கவும், இளம் திறமையாளா்களை ஊக்குவிக்கவும், இந்தியாவை படைப்பாற்றல் மற்றும் கலைச் சிறப்பிற்கான களமாக மாற்றவும் தொடா்ந்து பணியாற்ற, பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு நம்மை ஊக்குவிக்கட்டும்.