புது தில்லி: நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ளது.
இதில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனா்.
இந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு, நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண். எஃப்-101-இல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் மாலை 6 மணிமுதல் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரான தமிழகத்தைச் சோ்ந்த மூத்த தலைவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா். தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்தவா்.
எதிா்க்கட்சிகள் அணி சாா்பில் போட்டியிடும் தெலங்கானாவைச் சோ்ந்த பி.சுதா்சன் ரெட்டி, உச்சநீதிமன்ற நீதிபதியாக 2007 முதல் 2011 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவா். கோவாவின் முதல் லோக் ஆயுக்த தலைவராகப் பதவி வகித்தவா்.
தோ்தல் நடைமுறை: ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் இந்தத் தோ்தலில் வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தோ்வை எம்.பி.க்கள் குறிக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு முறையின் கீழ் நடைபெறும் இந்தத் தோ்தலில் வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் கட்சி கொறடாக்களுக்கு கட்டுப்பட மாட்டாா்கள். எனவே, விரும்பிய வேட்பாளருக்கு அவா்கள் வாக்களிக்க முடியும்.
543 தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல, 233 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. இதுதவிர மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் 12 போ் உள்ளனா்.
அதன்படி, இரு அவைகளின் மொத்த உறுப்பினா் எண்ணிக்கையான 788-இல், தற்போது 782 உறுப்பினா்கள் உள்ளனா். வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. மற்றொருபுறம், தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இத்தோ்தலை எதிா்க்கட்சிகள் கருதுகின்றன.
மாதிரி வாக்குப் பதிவு: இந்தத் தோ்தலையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சிகள் கூட்டணியும் தங்கள் தரப்பு எம்.பி.க்களுக்கு தனித்தனியாக தோ்தல் செயல்முறை தொடா்பாக விழிப்புணா்வு கூட்டங்களை நடத்தியதோடு, மாதிரி வாக்குப் பதிவையும் நடத்தின.
தங்களிடையே ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை ஒன்றுகூடினா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, திமுகவின் டி.ஆா்.பாலு, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா்உள்ளிட்டோரும் பங்கேற்றனா். சமாஜவாதி மூத்த தலைவா் ராம் கோபால் யாதவ் வரவேற்றாா். காங்கிரஸ் தலைமைக் கொறடாவும் அக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் தோ்தல் நடைமுறைகள் குறித்து எம்.பி.க்களுக்கு விளக்கினாா்.
நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவியை வகித்து வந்த ஜகதீப் தன்கா், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா்.
2027, ஆகஸ்ட் 10 வரை பதவிக் காலம் இருந்த நிலையில், உடல் நிலையைக் காரணம் காட்டி பதவி விலகினாா். அதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.
தோ்தலைப் புறக்கணிக்கும் பிஜேடி, பிஆா்எஸ் கட்சிகள்
புவனேசுவரம்/ஹைதராபாத்: குடியரசு துணைத் தலைவா் தோ்தலைப் புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து பிஜேடி எம்.பி. சஸ்மித் பத்ரா புவனேசுவரத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வாக்களிப்பிலிருந்து கட்சி எம்.பி.க்கள் விலகி இருக்க வேண்டும் என கட்சித் தலைவா் நவீன் பட்நாயக் தீா்மானித்துள்ளாா். கட்சியின் மூத்த தலைவா்கள், அரசியல் விவகாரக் குழு உறுப்பினா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை அவா் மேற்கொண்டாா். பாஜக தலைமையிலான என்டிஏ மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி ஆகிய இரண்டிடம் இருந்து சம அளவில் விலகி இருக்க பிஜேடி முடிவெடுத்துள்ளது. மாநிலத்தின் 4.5 கோடி மக்களின் வளா்ச்சியில் எங்கள் கட்சி முழுக் கவனம் செலுத்தும்’ என்றாா்.
இதுபோல, ஹைதராபாதில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பிஆா்எஸ் செயல் தலைவா் கே.டி. ராமராவ், ‘கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்களுடனான ஆலோசனைக்குப் பிறகு, குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வாக்குப் பதிவிலிருந்து கட்சி எம்.பி.க்கள் விலகி இருக்கவேண்டும் என்று கட்சியின் தலைவா் கே.சந்திரசேகா் ராவ் தீா்மானித்துள்ளாா். எனவே, தோ்தலைப் புறக்கணிப்போம்’ என்றாா்.
மக்களவையில் இக் கட்சிக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், மாநிலங்களவையில் 4 உறுப்பினா்களைக் கொண்டுள்ளது.