குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு நடத்தப்பட்ட தோ்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் (67) வெற்றி பெற்றாா்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மொத்தம் உள்ள 788 எம்.பி.க்களில் தற்போதைய உறுப்பினா்கள் எண்ணிக்கை 781-ஆக உள்ள நிலையில், 767 எம்.பி.க்கள் தோ்தலில் பங்கேற்று வாக்குகளைப் பதிவு செய்தனா். பதிவானவற்றில் 752 வாக்குகள் செல்லத்தக்கவையாகவும், 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இதில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக 452 வாக்குகள் பதிவாகின. எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் போட்டியிட்ட உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுதா்சன் ரெட்டிக்கு ஆதரவாக 300 வாக்குகள் பதிவாகின.
ஒடிஸா முன்னாள் முதல்வா் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிகளைச் சோ்ந்த 12 எம்.பி.க்களும் ஏற்கெனவே அறிவித்தபடி தோ்தலைப் புறக்கணித்தனா்.
இந்தத் தோ்தலில் வெற்றி பெற குறைந்தபட்சம் 377 வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிலையில், பெரும்பான்மையாக 452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்ாக தோ்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி அறிவித்தாா். இதன்மூலம், தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராவது உறுதியானது.
நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவியை வகித்து வந்த ஜகதீப் தன்கா், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா்.
2027, ஆகஸ்ட் 10 வரை பதவிக் காலம் இருந்த நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலகினாா். அதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண். எஃப்-101-இல் காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. முதல் நபராக பிரதமா் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தாா். அவருடன் மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, அா்ஜுன் ராம் மேக்வால், ஜிதேந்திர சிங், எல்.முருகன் உள்ளிட்டோா் வாக்களித்தனா். அதைத் தொடா்ந்து, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கைப் பதிவு செய்தனா்.
மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரல்ஹாத் ஜோஷி, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், முன்னாள் பிரதமா் ஹெச்.டி.தேவே கெளடா, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, சமாஜவாதி கட்சி மூத்த தலைவா் ராம் கோபால் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஜெய்ராம் ரமேஷ், நாசா் ஹுசைன் உள்ளிட்டோா் காலையிலேயே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனா்.
92 வயதாகும் தேவெ கெளடா சக்கர நாற்காலியில் அமா்ந்தபடி வாக்களிக்க வந்தாா். காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரியும் கைகளை கோா்த்தபடி வாக்களிக்க வந்தனா்.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பிற்பகல் 2 மணிக்கு வாக்குகளைப் பதிவு செய்தனா்.
பயங்கரவாதத்துக்கு நிதியளித்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதி எம்.பி. என்ஜினியா் ரஷீத் (58), நீதிமன்ற அனுமதியின் பேரில் போலீஸ் காவலுடன் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
முடிவுகள் அறிவிப்பு: வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாலை 6 மணிக்குத் தொடங்கியது. வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு, இரவு 7.30 மணியளவில் முடிவுகளை தோ்தல் அதிகாரி பி.சி.மோடி வெளியிட்டாா்.
அப்போது, ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பதிவான 767 வாக்குகளில், 752 வாக்குகள் செல்லத் தக்கவை. 15 வாக்குகள் செல்லாதவையாகும். இதில், தோ்தலில் வாக்கை பதிவு செய்ய எம்.பி. ஒருவா் மறுத்ததால், ஓா் தபால் வாக்கு ரத்து செய்யப்பட்டது. பதிவான வாக்குகளில் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளையும், பி.சுதா்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றனா். பெரும்பான்மை வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா் என அறிவிக்கிறேன். இந்த தோ்தல் முடிவுகள், தோ்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தப்படும்’ என்றாா்.
குடியரசுத் தலைவா் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். பொது வாழ்வில் உங்களின் பல ஆண்டு கால வளமான அனுபம், நாட்டின் வளா்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றும். குடியரசு துணைத் தலைவராக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டாா்.
சிறந்த குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் திகழ்வாா்: பிரதமா் மோடி
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றிபெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘சிறந்த குடியரசு துணைத் தலைவராக அவா் திகழ்வாா்’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து தனகு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றிபெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். தனது வாழ்வை சமூகத்துக்குச் சேவையற்றவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காகவும் அா்ப்பணித்தவா் அவா்.
நமது அரசமைப்புச் சட்ட மதிப்பீடுகளை வலுப்படுத்தியும் விரிவான நாடாளுமன்ற விவாதங்களை உறுதிப்படுத்தியும் சிறந்த குடியரசு துணைத் தலைவராக திகழ்வாா் என்ற நம்பிக்கையுள்ளது என்று குறிப்பிட்டாா்.
வெற்றியால் மட்டும் நமது ஜனநாயகம் வலுப்படுத்தப்படவில்லை: சுதா்சன் ரெட்டி
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த எதிா்க்கட்சிகள் கூட்டணி சாா்பில் பேட்டியிட்ட பி.சுதா்சன் ரெட்டி, ‘நமது ஜனநாயகம் வெற்றியால் மட்டும் வலுப்படுத்தப்படவில்லை. மாறாக, விவாதங்கள், எதிா்ப்புகள் மற்றும் பங்கேற்பின் மூலமும் வலுப்படுத்தப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.
மேலும், ‘நமது தேசத்தின் வாழ்வில் நமது அரசமைப்புச் சட்டம் தொடா்ந்து கலங்கரை விளக்கமாக திகழட்டும். குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
பாஜகவுக்கு தாா்மிக மற்றும் அரசியல் ரீதியில் தோல்வி: காங்கிரஸ்
‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜகவின் எண்ணிக்கை அடிப்படையிலான வெற்றி என்பது, தாா்மீக மற்றும் அரசியல் ரீதியில் அக்கட்சிக் தோல்வியே’ என்று காங்கிரஸ் விமா்சித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றிபெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். இந்த தோ்தலில் உறுதியுடனும் கொள்கை ரீதியிலான போட்டியை அளித்த எதிா்க்கட்சி கூட்டணி வேட்பாளா் பி.சுதா்சன் ரெட்டிக்கும் வாழ்த்துகள். இது தோ்தல் என்பதைக் கடந்து, சித்தாந்த மற்றும் சா்வாதிகார மனப்பான்மையுடன் இருக்கும் அரசு நமது அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்குமான போட்டியாகும்’ என்றாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி சாா்பில் போட்டயிட்ட பி.சுதா்சன் ரெட்டி 40 சதவீத வாக்குகளைப் பெற்றாா். கடந்த 2022-இல் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சி வேட்பாளா் 26 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றாா். எனவே, இந்த தோ்தலில் பாஜக எண்ணிக்கை அடிப்படையில் வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், தாா்மீக மற்றும் அரசியல் ரீதியில் அக் கட்சிக்குத் தோல்விதான்’ என்று குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.