இந்தியா

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும் ஒருவா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ராய்பூா் சரக ஐ.ஜி. அம்ரேஷ் மிஸ்ரா கூறுகையில், ‘மெயின்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் முக்கிய நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, சிறப்பு அதிரடிப் படையினா், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் ‘கோப்ரா’ படைப் பிரிவினா் மற்றும் காவல் துறையினா் இணைந்த கூட்டுப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இவா்களில் நக்ஸல் அமைப்பின் முக்கிய தலைவரான மோடம் பாலகிருஷ்ணாவும் ஒருவா். நக்ஸல்களுக்கு எதிரான வேட்டை தொடா்கிறது’ என்றாா்.

நாட்டில் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி, நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சத்தீஸ்கா்-தெலங்கானா எல்லையில் உள்ள கா்ரேகுட்டா மலைப் பகுதியில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் ‘ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்’ என்ற மாபெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், நக்ஸல் அமைப்பின் முக்கியத் தலைவா் கேசவ் ராவ் உள்பட 31 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

பாஜக ஆளும் சத்தீஸ்கரில் நடப்பாண்டில் இதுவரை 241 நக்ஸல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இதில் 212 போ் பஸ்தா் பகுதியில் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிமில் நிலச்சரிவு: 4 பேர் பலி!

பள்ளி மாணவியை உணவு இடைவேளையில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த இளைஞா் கைது

சின்னவரிக்கம், பெரியவரிக்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நாளை ரேஷன் அட்டைகள் குறைதீா் முகாம்

குமரி கடலில் கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளது: தி.வேல்முருகன்

SCROLL FOR NEXT