மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இனமோதல்கள் ஏற்பட்ட பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டார்.
மணிப்பூரின் சுராசந்த்பூரில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
"மணிப்பூர் என்பது நம்பிக்கையின் நிலம். துரதிர்ஷ்டவசமாக, இந்த அழகான பகுதியில் வன்முறை சூழல் ஏற்பட்டுவிட்டது. சற்றுமுன், நிவாரண முகாம்களில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்தேன். மணிப்பூரில் நம்பிக்கையின் புதிய விடியல் உதயமாகி வருகிறது என்பதை நம்பிக்கையுடன் சொல்கிறேன்.
வளர்ச்சி வேரூன்ற, அமைதி அவசியம். கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் பல மோதல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களும் அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். சமீபத்தில் பல்வேறு குழுக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அமைதியின் பாதையில் முன்னேறிச் செல்ல அனைத்து அமைப்புகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நானும் இந்திய அரசும் மணிப்பூர் மக்களுடன் உள்ளன.
மணிப்பூர் மக்களின் வாழ்க்கையில் அமைதியை நிலைநாட்ட நான் உறுதிபூண்டுள்ளேன். இது எனது வாக்குறுதியாகும். வன்முறைகளில் வீடுகளை இழந்த மக்களுக்காக 7,000 புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. பணிபுரியும் பெண்களுக்காக அரசு விடுதிகள் கட்டப்படுகிறது. வன்முறை காரணமாக இடம்பெயர்ந்த மக்களை விரைவில் பொருத்தமான இடங்களில் மீள்குடியேற்றுவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
2014 முதல் மணிப்பூரை மேம்படுத்த தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். மணிப்பூர் சாலைகள், ரயில் திட்டங்களில் கவனம் செலுத்துகிறோம். கடந்த சில ஆண்டுகளில், மணிப்பூரில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ. 3,700 கோடி செலவிடப்பட்டது. புதிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ரூ. 8,700 கோடி செலவிடப்படுகிறது.
ஜிரிபாம் - இம்பால் ரயில் பாதை விரைவில் இந்திய ரயில்வேவுடன் மணிப்பூர் தலைநகரை இணைகும். இதற்காக ரூ.22,000 கோடி செலவிடப்படுகிறது. ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய இம்பால் விமான நிலையம், விமான இணைப்பை மேம்படுத்தும்.
நாம் மிக விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகிறோம். நமது மணிப்பூர், நாட்டின் பிற பகுதிகளுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது. மணிப்பூரில் ஏற்கெனவே 60,000 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. மணிப்பூரில், 7 - 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 25 - 30 ஆயிரம் வீடுகளில் மட்டுமே தண்ணீர் குழாய்கள் இருந்தன. இன்று, 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் குழாய்கள் உள்ளன.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.