பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங், பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா, அமிர்தசரஸ் எம்பி குர்ஜீத் அவுஜ்லா மற்றும் பிற கட்சித் தலைவர்கள் ராகுல்காந்தியுடன் சென்றனர்.
அமிர்தசரஸ் வந்த ராகுல்காந்தி, அங்கிருந்து அஜ்னாலாவில் உள்ள கோனேவால் கிராமத்திற்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சேதம் குறித்துக் கேட்டறிந்தார்.
கோனேவால் கிராமத்தைப் பார்வையிட்ட பிறகு, அமிர்தசரஸின் ராமதாஸ் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். மேலும் குருதாஸ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
பஞ்சாபில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளது. சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் பெருக்கெடுத்ததாலும், ஹிமாசலம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பஞ்சாபில் கனமழை வெள்ள நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியது. வெள்ளத்தால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர், 1.98 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
செப். 9 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக மேற்கொண்டார். வெள்ள நிலைமை மற்றும் சேதத்தையும் ஆய்வு செய்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு ஏற்கெனவே ரூ.12,000 கோடி நிதியுதவி அறிவித்திருந்த நிலையில், கூடுதலாக ரூ. 1,600 கோடி நிதியுதவியையும் அவர் அறிவித்தார்,
முன்னதாக, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌகான், எல் முருகன் மற்றும் பி.எல். வர்மா ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.