சுரேகா யாதவ், வரலாற்றில் தனது பெயரை பதிவு செய்து 36 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்தான் ஆசியாவிலேயே முதல் பெண் ரயில் ஓட்டுநர். செப். 30ஆம் தேதி தனது தொழில் பயணத்தை இவர் நிறைவு செய்யவிருக்கிறார்.
வந்தே பாரத் முதல் டெக்கான் குயின் வரை பல ரயில்களை இயக்கி சாதனை படைத்த இவர், தொழில்மீதான ஆர்வம், உறுதிப்பாடு, பாலின வேறுபாடு, தொழிலில் பெண்களுக்கான சவால்கள் என பலவற்றை உடைத்தெறிந்து, எண்ணற்றக் கனவுகளுடன் இருக்கும் மகளிருக்கு எந்தத் தடைகளையும் உடைத்தெறியும் வல்லமைகொண்ட நல் வழிகாட்டியாக மாறியிருக்கிறார்.
1988ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் சுரேகா இணைந்தார். 1989ஆம் ஆண்டு உதவி ரயில் ஓட்டுநராக பணியாற்றியவர், படிப்படியாக முன்னேறி, 1996ஆம் ஆண்டு சரக்கு ரயில்களை இயக்கினார். பத்தாண்டுகளில் டெக்கான் குயின் ரயிலை இயக்கினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி மற்றொரு சாதனையை அவர் படைத்தார். சோலாபூர் - மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கியதன் மூலம், அதிவேக ரயில் ஓட்டுநரான பெண் என்ற சாதனையையும் பெற்றார். அப்போது, அவருக்கு மிகச் சிறப்பான பாராட்டுகள் குவிந்தன. நாடு முழுவதும் இந்திய ரயில்வேக்கும், இந்திய மகளிருக்கும் பெருமை சேர்த்த தருணமாகவும் அது மாறியது.
மகாராஷ்டிர மாநிலம் சதாராவைச் சேர்ந்தவர் சுரேகா. விவசாயக் குடும்பத்தில் மூத்த பெண்ணாகப் பிறந்து எலக்ட்ரிக்கல் பொறியியல் படித்தார். இவரது உத்வேகம், ஆண்கள் கோலோச்சிய துறையில் சாதிப்பது என்ற இலக்கு போன்றவை இந்த சாதனைகளுக்குக் காரணமாக அமைந்தது என்றே கூறலாம்.
மத்திய ரயில்வே, சுரேகா யாதவ் பற்றி தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. அதில், சுரேகா யாதவ், ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர், செப்டம்பர் 30ஆம் தேதி, தன்னுடைய 36 ஆண்டு கால பணியிலிருந்து ஓய்வுபெறவிருக்கிறார்.
மிகச் சிறந்த வழிகாட்டியாகவும், தடைகளை உடைத்தெறிந்து, எண்ணற்ற பெண்களுக்கு உத்வேகமாக இருப்பவர், எல்லா தடைகளையும் தாண்டி எந்தக் கனவையும் பெண்கள் அடைய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
இந்திய ரயில்வேயில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் முறைக்கு எப்போதும் இவரது வாழ்க்கைப் பயணம் ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று பதிவிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது 1500 பெண் ரயில் ஓட்டுநர்கள் உள்ளனர். இதற்கு துவக்கப் புள்ளியாக இருந்தவர் சுரேகா யாதவ்.
இதையும் படிக்க... செப்.21 சூரிய கிரகணம்: சூரிய உதயமே வான அதிசயம் காட்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.