ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் திறன் குறித்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பயிற்சியின்போது சோதனை மேற்கொள்ளவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மத்திய பிரதேசத்தில் அக்.6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதிவரை ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பின் (ஐடிஎஸ்) தலைமையகம் சாா்பில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
‘ட்ரோன்கள் தாக்குதல் தடுப்பு மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு: நவீன போா்க்களத்தின் எதிா்காலம்’ என்ற தலைப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணா்கள் பங்கேற்ற மாநாடு புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விமானப் படைத் தளபதியும் ஐடிஎஸ் துணைத் தலைவருமான ராகேஷ் சின்ஹா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாதுகாப்புப் பயிற்சியில் இந்திய ராணுவப் படை, விமானப் படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் வீரா்களும் தொழில்துறையினரும், ஆய்வாளா்கள் மற்றும் கல்வியாளா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளனா்.
அப்போது ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளின் திறன்களை முழுமையாக சோதனையிடவுள்ளோம்’ என்றாா்.
போா், போா்க்களம் மற்றும் போா்களின்போதான மோதல்கள் குறித்து மத்திய பிரதேசத்தில் உள்ள ராணுவப் போா் கல்லூரியில் கடந்த மாதம் முதல்முறையாக முப்படையினா் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த மாதம் முப்படைகளும் பங்கேற்கும் மற்றொரு பிரதான பயிற்சி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.