திருட்டை பிடித்த பிறகுதான் பூட்டுப்போட ஞாபகம் வந்ததா என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவதற்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கி இருப்பதை ராகுல் விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் மூலம் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக சான்றுகளை வெளியிட்டு, கடந்த மாதம் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கே தெரியாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்களை சிலர் நீக்க முயற்சி மேற்கொண்டதாக கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.
ராகுலின் குற்றச்சாட்டு
”கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,000 -க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் அவர்களுக்கே தெரியாமல் நீக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக வெளிமாநில தொலைபேசி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாக்காளரின் உள்நுழைவு பயன்படுத்தப்பட்டு, 14 நிமிடங்களில் 12 பேரின் பெயர்கள் நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மனிதரால் இவற்றை செய்ய இயலாது, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்துள்ளனர்.
இதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் கோரி கர்நாடக சிஐடி பலமுறை கடிதம் அளித்தும் பதில் இல்லை” என்று ராகுல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கவும் புதிய பெயரை சேர்க்கவும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரக்கூடிய ஓடிபி சரிபார்ப்பை தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
இதுதொடர்பான செய்தியை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “ஞானேஷ் ஜி, (தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்) நாங்கள் திருட்டைப் பிடித்த பிறகுதான் பூட்டுப் போட ஞாபகம் வந்ததா? திருடர்களையும் பிடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக சிஐடி-க்கு எப்போது ஆதாரங்களை கொடுக்கப் போகிறீகள் என்பதை சொல்லுங்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.