புது தில்லி: இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் 11.52 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்திசார் ஊக்கத் தொகை (போனஸ்) ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்பட்டு வரும் நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கும் அதே அளவு போனஸ் தொகையை வழங்க ரயில்வே வாரியம் முடிவெடுத்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக, வெளியான அறிவிப்பில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.1,866 கோடி செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனஸ் தொகையானது, ரயில்வே ஊழியர்களில் தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரயில்வே கார்டுகள், ரயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.
ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு சார்பில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க... பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.