2029-க்குள் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முழுப் பகுதியும் செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது,
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டதின் சூரத் மற்றும் குஜராத்தில் உள்ள பிலிமோரா இடையேயான 50 கி.மீ. நீளம் 2027 ஆம் ஆண்டு திறக்கப்படும். மேலும் 2029க்குள் மும்பை- அகமதாபாத் இடையேயான முழுப் பகுதியும் செயல்பாட்டுக்கு வரும்.
செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மும்பை - அகமதாபாத் இடையேயான தூரத்தை சுமார் 2 மணி நேரம் ஏழு நிமிடங்களில் புல்லட் ரயில் கடக்கும் என்று அவர் கூறினார், இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மிகவும் சிறப்பாக முன்னேறி வருவதாக வலியுறுத்தினார்.
கட்டுமானத்தில் உள்ள சூரத் புல்லட் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டு, தண்டவாள நிறுவல் பணிகளை ஆய்வு செய்தார். முதல் புல்லட் ரயில் திட்டத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது. சூரத் மற்றும் பிலிமோரா இடையேயான திட்டத்தின் முதல் 50 கி.மீட்டர் 2027 ஆம் ஆண்டுக்குள் திறக்கப்படும். அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.
2028 ஆம் ஆண்டுக்குள், தாணே-அகமதாபாத் பகுதி முழுவதும் இயக்கப்படும். 2029-க்குள் மும்பை-அகமதாபாத் பகுதி முழுவதுமாக திறக்கப்படும் என்று அவர் கூறினார்.
ரயில்களின் பாதுகாப்பான மற்றும் திறமையான இயக்கத்தை உறுதி செய்வதற்காக மிகவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஜப்பானின் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன் உலகின் முதல் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஜப்பான் பொருளாதாரம் பெருகியது.
இந்தியாவிலும் புல்லட் ரயில் அறிமுகத்துக்குப் பின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.