இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தி லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு, 1990-லிருந்து 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 1990-ல் ஒரு லட்சம் பேரில் 84.8 பேருக்கு இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2023-ல் 107.2 பேருக்கு அதிகரித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைகள் இருந்தபோதிலும், இறப்புகள் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், 33 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவில் புற்றுநோய் பாதிப்பும் இறப்பும் கணிசமாகக் குறைந்துள்ளதாக தி லான்செட் ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணமாக - இந்த இரு நாடுகளிலும் புகையிலை கட்டுப்பாடு, உலகளாவிய தடுப்பூசி, ஒருங்கமைக்கப்பட்ட பரிசோதனை என்று தில்லியைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர் கூறுகிறார்.
அதிகளவிலான புகையிலைப் பயன்பாடு, உடற்பருமன், தொற்றுகள் மற்றும் முன்கூட்டியே கண்டறியும் சோதனைகளில் தாமதம் போன்றவற்றில் இந்தியா மோசமான நிலையில் உள்ளதாகவும் அபிஷேக் தெரிவித்தார்.
எச்பிவி மற்றும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, மேமோகிராஃபி, நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை, கொலோனோஸ்கோபி பரிசோதனை, உரிய நேரத்தில் உரிய சிகிச்சை போன்றவை போதுமானதாக இல்லை. புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்கும் உத்திகளை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.
உலகளவில் குறிப்பிடத்தக்க நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது. மேலும் வரும் ஆண்டுகளிலும், குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் எப்படி இருக்கும் என்று வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.
புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்றபோதிலும், கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மற்றும் செயல்படுத்துதல் குறித்து உலகளாவிய சுகாதாரத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும், மேலும் இவற்றை சமாளிக்க பல அமைப்புகளிடம் போதுமான நிதி இல்லை என்றும் வாஷிங்டன் பல்கலை கூறுகிறது.
1990 முதல் 2023 இடையிலான காலகட்டத்தில், சீனாவில் புற்றுநோய் பாதிப்பு 19 சதவிகிதமும், அமெரிக்காவில் 20 சதவிகிதமும் குறைந்துள்ளது. மேலும், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளும் குறைந்துள்ளன. சீனாவில் புற்றுநோய் இறப்புகள் 43 சதவிகிதமும், அமெரிக்காவில் 33 சதவிகிதமும் குறைந்துள்ளன.
2023 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 1.04 கோடி இறப்புகளில் 43 லட்சம் இறப்புகளில் நடவடிக்கை எடுத்திருக்கும் வாய்ப்புகள் இருந்ததாகவும் பல்கலை கூறியது.
2023-ல் புற்றுநோய் இறப்புகளால் அனைத்து நாடுகளின் வருமான நிலைகளும் பாதித்தன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைத்தவிர, அனைத்து நாடுகளின் வருமான நிலைகளில் புகையிலைதான் முன்னணி ஆபத்துக் காரணியாக இருந்தது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முன்னணி ஆபத்துக் காரணியாக இருந்தது.
இந்தியாவில் பெரும்பாலான புற்றுநோய்கள், தாமதமாகத்தான் கண்டறியப்படுகின்றன. இதனால், முன்கூட்டிய கணிப்பு மோசமாக உள்ளது.
இதையும் படிக்க: செய்யறிவைக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது வெளியேறுங்கள்! - அக்சென்ச்சர் சிஇஓ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.