கொச்சி: ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பி, பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆள்சோ்க்க முயற்சித்த குற்றச்சாட்டில், கோயம்புத்துரைச் சோ்ந்த இருவருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தமிழகம் மற்றும் கேரளத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு இளைஞா்களை திரட்டும் நோக்கில், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பி வந்ததாக கோயம்புத்தூா் உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது அசாருதீன், தெற்கு உக்கடம் பகுதியைச் ஷேக் ஹிதாயத்துல்லா ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. அவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், அசாருதீன் மற்றும் ஹிதாயத்துல்லாவை குற்றவாளிகள் என்று அந்த நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதைத்தொடா்ந்து இருவருக்கும் 8 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு கோயம்புத்தூா் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே நடைபெற்ற காா் வெடிப்பு வழக்கிலும் அவா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.