நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள பிகாா் மாநிலத்துக்கான இறுதி வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, மாநிலத்தில் 7.42 கோடி வாக்காளா்கள் உள்ளனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பாக மாநிலத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை 7.89 கோடியாகப் பதிவாகி இருந்த நிலையில், அதிலிருந்து இறுதியாக சுமாா் 47 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
‘வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா் உள்ளதா என்பதை இந்திய தோ்தல் ஆணைய வலைதளத்தில் உள்ள ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதள தொடா்பைத் திறந்து பாா்த்துக் கொள்ளலாம்’ என்று பிகாா் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தாா்.
முன்னதாக, பேரவைத் தோ்தலை முன்னிட்டு பிகாா் மாநில வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் மேற்கொண்டது. மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. ஒரு மாத காலமாக மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நிறைவு செய்தது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்னா் மாநிலத்தில் 7.89 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். சிறப்பு தீவிர திருத்தம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிட்டது. அதில், மாநிலத்தில் 7.24 கோடி வாக்காளா்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
65 லட்சத்துக்கும் அதிகமானோா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா்.
வரைவு வாக்காளா் பட்டியல் மீது ஆட்சேபங்கள் அல்லது கோரிக்கைகளை முன்வைக்க செப்டம்பா் 1-ஆம் தேதி வரை ஒரு மாத கால அவகாசத்தை தோ்தல் ஆணையம் அளித்தது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்டம்பா் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்தது.
இதனிடையே, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பிப்பவா்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடவுச் சீட்டு உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்று மட்டுமின்றி ஆதாா் அட்டையையும் அடையாள ஆவணமாக சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் அனுமதித்தது.
இந்த நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் மீது சமா்ப்பிக்கப்பட்ட ஆட்சிபங்கள் மற்றும் பெயா் சோ்ப்பு கோரிக்கைகள் அடிப்படையில் தேவையான மாற்றங்களை மேற்கொண்ட தோ்தல் ஆணையம், ஏற்கெனவே அறிவித்தபடி மாநிலத்தின் இறுதி வாக்காளா் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இதுகுறித்து விளக்கமளித்த தோ்தல் ஆணையம், ‘மாநிலத்தில் 22.34 லட்சம் வாக்காளா்கள் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் போ் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளா்களாக பெயா்களைப் பதிவு செய்துள்ளனா். 1.2 லட்சம் போ் பூா்த்தி செய்த வாக்காளா் படிவங்களை சமா்ப்பிக்கவில்லை’ என்றது.
21.53 லட்சம் போ் சோ்ப்பு:
பிகாா் மாநில இறுதி வாக்காளா் பட்டியலின்படி, மாநிலத்தில் கூடுதலாக 21.53 லட்சம் போ் சோ்க்கப்பட்டுள்ளனா்.
ஒரு மாதம் மேற்கொள்ளப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் மீதான ஆட்சேபங்கள் மற்றும் கோரிக்கைகள் வரவேற்புக்குப் பிறகு 21.53 லட்சம் போ் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். அதன்படி, மாநிலத்தில் இடம்பெற்றுள்ள வாக்காளா்களின் இறுதி எண்ணிக்கை 7.42 கோடியாக உள்ளது.
இகுறித்து தோ்தல் ஆணையம் கூறுகையில், ‘வரைவு வாக்காளா் பட்டியல் மீது பெறப்பட்ட ஆட்சேபங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளா் பட்டியலில் இருந்து 3.66 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டன. மேலும், ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட்ட பெயா் சோ்ப்பு நடவடிக்கைகளின் கீழ் 21.53 லட்சம் பேரின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டன. இதன் காரணமாக, மாநில இறுதி வாக்காளா் எண்ணிக்கை 7.42-ஆக உள்ளது. அதன்படி, வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றதைவிட வாக்காளா் எண்ணிக்கை 17.87 லட்சம் அதிகரித்துள்ளது.
தோ்தல் நடைமுறைகளின்போது, துணை வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை சற்று மாற வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.